×

20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: வேலூர் மாவட்டம் குருமுடிதாங்கி ஊராட்சி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றிய ராமலிங்கம் கடந்த 2000 ஆகஸ்டில் பணிக்காலத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, தனக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கக்கோரி ராமலிங்கத்தின் மகன் அருணகிரி 2000 நவம்பர் மாதம் அரசுக்கு விண்ணப்பித்தார்.

அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அருணகிரிக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்குமாறு கடந்த 2023ல், உத்தரவிட்டது. உத்தரவில் தமிழக சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரத்துறை 2021ல் வெளியிட்ட அரசாணையில் கருணை அடிப்படையில் பெண்கள் மட்டுமே இந்த துறையில் வேலை வாய்ப்பு கோர முடியும் என்று கூறப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் அருணகிரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.முரளி ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் நவீன்குமார் ஆஜராகி, ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் டிசி குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனுதாரருக்கு பணி வழங்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு கருணை அடிப்படையில் பணி நியமனம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ramalingam ,Kurumudithangi Panchayat School ,Vellore ,Arunagiri ,
× RELATED புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு...