×

குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழை பெய்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில் மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலா தலங்களை தேடி சென்று வருகின்றனர். கடும் வெயிலுக்கு இடையே குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வற்றாமல் தண்ணீர் கொட்டுகிறது.

எனவே உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரையும் தன்வசம் ஈர்த்துள்ளது. கடந்த பல நாட்களாக அருவியில் நீரோடை போலவே தண்ணீர் விழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் குமரி மாவட்டத்தின் மலையோர பகுதி மற்றும் பரவலாக கோடை மழை பெய்தது.இதனால் மலையில் உள்ள நீரூற்றுகள் மீண்டும் துளிர்த்தன. இதன் எதிரொலியாக கோதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இந்த தண்ணீர் திற்பரப்பு அருவியில் வெள்ளமென கொட்டி வருகிறது. கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவியில் தற்போதும் மிதமான அளவில் குளிர்ந்த தண்ணீர் கொட்டுகிறது.

இதனால் தினமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளு குளு குளியல் போட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று காலையிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கினர். அருவியில் குளித்து மகிழ்ந்ததோடு, அருகில் உள்ள சிறுவர் நீச்சல் குளத்திலும் நீச்சலடித்தபடியே உல்லாச குளியல் போட்டனர்.சுற்றுலா பயணிகள் வருகையால் அருவியின் மேல் தடாகத்தில் உள்ள தடுப்பணையில் படகு சவாரியும் களைகட்டியது. சுற்றுலா பயணிகள் படகில் அமர்ந்தவாறு கோதையாறு மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியை கண்டு ரசித்தனர்.

The post குமரியில் வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் கோடை மழையால் புத்துயிர் பெற்ற திற்பரப்பு அருவி: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் appeared first on Dinakaran.

Tags : Tilparapu Falls ,Kumari ,Kulasekaram ,Kanyakumari district ,Tilparapu ,Tilparapu waterfall ,Dinakaran ,
× RELATED மர்ம நபர்கள் அட்டகாசத்தால் திற்பரப்பு தடுப்பணையின் மதகுகள் சேதம்