×

தேர்தல் பத்திரங்கள் முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் முறைகேடு குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டம் வெளிப்படைத்தன்மையற்றது என்று கூறி உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி அந்த திட்டத்தை ரத்து செய்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்கள், அதை பெற்றுக்கொண்ட அரசியல் கட்சிகள் விவரத்தை வெளியிட்டது. இதன்படி, ஆளும் பாஜ அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி பெற்றது அம்பலமானது. அதிலும் பல நிறுவனங்களை சிபிஐ, ஐடி, அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தி மிரட்டி தேர்தல் பத்திரங்கள் பெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘‘நாடு முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையில் சிக்கிய பல்வேறு நிறுவனங்கள் தான் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி அளித்துள்ளனர். அதனால் இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனவே தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முறைகேடு குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

The post தேர்தல் பத்திரங்கள் முறைகேடு விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Special Investigation Committee ,Supreme Court ,New Delhi ,BJP government ,
× RELATED தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி...