×

ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: 89 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல்

புதுடெல்லி: நாடுமுழுவதும் 2ம் கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. ராகுல், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தொகுதிகளில் ஏப்.26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி 102 தொகுதிகளில் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக அப்போது தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இடதுசாரிகள் சார்பில் ஆனிராஜாவும், பாஜ சார்பில் கே.சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். அதேபோல் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாஜ சார்பில் களமிறங்கி உள்ளார்.

மேலும் நடிகர்கள் கிருஷ்ணகுமார், முகேஷ் ஆகியோர் போட்டியிடும் கொல்லம், கருணாகரனின் மகன் முரளீதரன், கேரள முன்னாள் அமைச்சர் சுனில்குமார் மற்றும் நடிகரும், முன்னாள் பாஜ மேலவை எம்பியுமான சுரேஷ்கோபி போட்டியிடும் திருச்சூர் தொகுதிகளிலும் 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. சட்டீஸ்கரின் ராஜ்நந்த்கான் தொகுதியில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகருமான ஓம் பிர்லா, நடிகையும், பாஜ எம்பியுமான ஹேமமாலினி போட்டியிடும் மதுரா தொகுதியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. ஏப்.26ம் தேதி 89 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

* 3ம் கட்ட தேர்தலில் 1351 வேட்பாளர்கள்
மே 7ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை மூன்றாம் கட்ட தேர்தலில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 95 தொகுதிகளில் 2963 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு 1351 பேர் களத்தில் உள்ளனர்.

The post ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: 89 தொகுதியில் 2ம் கட்ட தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Ombirla ,New Delhi ,Lok Sabha ,Speaker ,Dinakaran ,
× RELATED 13 மாநிலங்களில் மக்களவை 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு