×

கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் 325 ஆசிரியர்களை டேராடூனுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு

சேலம்: தமிழகத்தில் கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில், 325 ஆசிரியர்களை வரும் 26, 27ம் தேதிகளில் டேராடூனுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர் நலனில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்திட, சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களை, வெளிநாடுகளில் உலக அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம், கனவு ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டது. அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தேர்வு நடந்தது. முதற்கட்ட தேர்வில் 8,096 பங்கேற்ற நிலையில், இவர்களில் இருந்து 2,008 பேர் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட தேர்வு மூலம் 992 பேர் தேர்வாகினர்.

இறுதியில் 75% மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற 380 ஆசிரியர்கள், கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சரியாக திட்டமிடப்பட்டு விஞ்ஞானபூர்வமாக ஆசிரியர்கள் தத்தம் திறன்களை வெளிப்படுத்திய காரணத்தால், அந்த ஆசிரியர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் 90% முதல் 100% வரை மதிப்பெண்கள் பெற்ற, வரிசை எண் 1 முதல் 55 வரையிலான ஆசிரியர்கள் கல்வி, கலை, தொழில்நுட்பம், பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

தொடர்ந்து, 75% முதல் 89% வரை மதிப்பெண்கள் பெற்ற வரிசை எண் 56 முதல் 380 வரையிலான, 325 ஆசிரியர்கள் வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் இரு குழுக்களாக டேராடூன் அழைத்துச் செல்லப்பட்டு, மே 1ம் தேதி திரும்ப அழைத்து வரவும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்ட 325 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு அவர்கள் தெரிவு செய்யப்பட்ட விவரத்தையும், அவர்கள் டேராடூன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ள விவரத்தையும் சிஇஓக்கள் தெரிவிக்க வேண்டும். இவர்களை விமானம் மூலம் அழைத்துச்செல்லும் நேரம் தொடர்பான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும். மேலும், இப்பட்டியலில் உள்ள ஆசிரியர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் நிலுவையில் இருப்பின், அது சார்ந்த விவரத்தினை உடனடியாக பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

The post கனவு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களில் 325 ஆசிரியர்களை டேராடூனுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Dehradun ,Salem ,Tamil Nadu ,
× RELATED அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை...