×

16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன் கோயிலில் 90 ஆண்டுகளுக்குபின் வடக்கு வாசல் திறக்கப்பட்டது

*26ம் தேதி மகா கும்பாபிஷேகம்

*பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி

சிவகாசி : சிவகாசியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் மகா கும்பாபிஷேக பணிகள் நேற்று யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 90 ஆண்டுகளுக்குபின் வடக்கு வாசல் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.சிவகாசி நகரின் மையப்பகுதில் அமைந்திருக்கிறது காசி விசுவநாதர் ஆலயம். இந்த கோயிலின் மூலவர் சிவன் விசுவநாதராகவும், அன்னை பார்வதி விசாலாட்சியாகவும் அமைந்து அருள் புரிகின்றனர்.

கோயில் மூன்று நிலைகளுடைய கோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த கோயில் 16ம் நூற்றாண்டில் பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என நம்பப்படுகிறது. இக்கோயிலில் 1966ம் ஆண்டு அதனை தொடர்ந்து 1996ம் ஆண்டு மற்றும் கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன்பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி பாலஸ்தாபனம் பூஜைகளுடன் தொடங்கியது. கடந்த 8 மாதமாக கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

கோயில் முழுவதும் உள்ள கல்தூண்களில் அடித்துள்ள வண்ண பெயிண்ட்டுகள் நவீன வாட்டர் வாஷ் டெக்னாலஜி முறையில் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப காலகட்டங்களில் கோயில் தூண்கள் எப்படி இருந்ததோ அதே போன்று காட்சியளிக்கின்றது. மேலும் கோயில் முழுவதிலும் கருங்கல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் மேற் பிரகாரம் முழுவதிலும் புதிதாக தளவரிசை கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கோயிலில் நுழைவு பகுதி வலதுபுறத்தில் வடக்கு வாசல் சுமார் 90 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தது. தொல்பொருள் மற்றும் அறநிலையத்துறை ஆலோசனையின்படி அடைக்கப்பட்டிருந்த அந்தசுவர் நீக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. அதற்கு சாலை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடக்கு வாசலில் அழகிய சாமிகள் கலை ஓவியம் வரையப்பட்டுள்ளது.

கோயில் முழுவதிலும் பழுதடைந்த மின் விளக்குகள் மற்றும் வயரிங் வேலைகள் முற்றிலும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கோயிலில் உள்ள 63 நாயன்மார்கள் சிலை பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கோயில் விமானங்கள், சாலை கோபுரங்களில் உள்ள சுதைகள் எடுக்கப்பட்டு புதிதாக காப்பர் கம்பி உபயோகப்படுத்தி அனைத்து விமானங்களிலும் புதிதாக சுதைகள் செய்யப்பட்டுள்ளன.

திருக்கல்யாண மண்டபம் சிமெண்ட் கூரைகளை அகற்றிவிட்டு பழமை மாறாமல் கேரளா ஓடுகளை வைத்து மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று கோயில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர்களை பராமரித்து புதிய வண்ணம் பூசப்பட்டுள்ளன.

இதற்கு தேவையான நிதிகள் அனைத்தும் உபயதாரர்கள் மற்றும் சிவ பக்தர்கள் மூலம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் வரும் 26ம் கோயிலில் மகா கும்பாபிஷேக பணிகள் நடைபெற உள்ளது. கோயிலில் மகா கும்பாபிஷேக பணிகள் நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், தனபூஜை மற்றும் ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இன்று 2ம் நாளில் முதற்கால யாகசாலை பூஜைகளும், நாளை 3ம் நாளில் 2ம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 3ம் கால யாகசாலை பூஜைகளும், வியாழக்கிழமை 4ம் கால யாகசாலை மற்றும் 5ம் கால யாகசாலை பூஜைகளும், 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகின்றது.

புத்துயிர் பெற்றது கோயில் தெப்பம்

கோயில் தெப்பம் நான்கில் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக தெரியும்படி பணிகள் நடைபெற்றுள்ளது. சாமி சன்னதி, அம்பாள் சன்னதி நடராஜர் சன்னதி, கால பைரவர் சன்னதி மற்றும் கோயிலில் தலைவாசல் நிலைகதவு அனைத்திற்கும் பித்தளை தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. கோயிலின் நுழைவு தெற்கு பகுதியில் 2400 சதுர அடி பரப்பளவில் புதிதாக அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் மண்டபம் எதிரில் புதிதாக கோயில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளன.

The post 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன் கோயிலில் 90 ஆண்டுகளுக்குபின் வடக்கு வாசல் திறக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Sivakasi Shiva temple ,Maha Kumbabhishekam ,Sivakasi ,Shiva temple ,Yagasala Pujas ,Shivakasi Shiva temple ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்