×

இலங்கையில் இருந்து அரிச்சல்முனைக்கு எட்டு வயது சிறுவன் உள்பட 3 தமிழர்கள் படகில் வருகை

ராமேஸ்வரம் : இலங்கையில் இறுதி போர் வரை பணியாற்றியவர் தன் மகனுடன் இலங்கையில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை வந்தார்.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின் மிகவும் ஏழ்மையில் வாழும் தமிழர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் வருவது தொடர்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இலங்கை கிளிநொச்சி பகுதியில் இருந்து மூன்று பேர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை ஐந்தாம் மணல் தீடை பகுதிக்கு அதிகாலையில் வந்தனர். அப்பகுதியில் மீன்பிடித்து தனுஷ்கோடிக்கு திரும்பிய மீனவர்கள், அதுபற்றி மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மரைன் எஸ்.ஐ காளிதாஸ் தலைமையில் போலீசார் படகில் சென்று அவர்களை மீட்டு அரிச்சல்முனையில் இறக்கினர்.

இவர்கள் இலங்கை மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் (45), இவரது 8 வயது மகன் மற்றும் சிவனேஸ்வரன் (49) என்பது விசாரணையில் தெரிந்தது. மூன்று பேரையும் மரைன் போலீசார் மண்டபம் காவல் நிலையம் கொண்டு விசாரணை நடத்தினர். இதில் கஜேந்திரன் சிறுவயதிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். போரில் கையில் குண்டு அடிபட்ட காயத்துடன் இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றி இறுதி யுத்த காலம் வரை இருந்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பிறகு சரணடைந்து. இலங்கை சிறையில் சில ஆண்டுகள் தண்டனை பெற்று விடுதலை ஆனார்.

இந்நிலையில் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளார். 8 வயது மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா புறப்பட்டதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை விற்ற பணத்தை வைத்து படகுக்கு பணம் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய, மாநில புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

The post இலங்கையில் இருந்து அரிச்சல்முனைக்கு எட்டு வயது சிறுவன் உள்பட 3 தமிழர்கள் படகில் வருகை appeared first on Dinakaran.

Tags : Tamils ,Arichalmunya ,Sri Lanka ,Rameswaram ,Arichalmunai ,Arichal Muni ,
× RELATED ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு