×

சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை, ஏப்.23: சென்னை மாநகரில் வாகனங்களை சட்டவிரோதமாக நிறுத்துவதை தடுப்பதற்கான கொள்கை முடிவு, 3 மாதங்களில் இறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் வதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும், இதுசம்பந்தமாக விதிகள் வகுக்க கோரியும் கிருஷ்ண பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவதை தடுக்க கொள்கை வகுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கும் வகையில் வரைவு கொள்கையை மாநகராட்சி வகுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11ம் தேதி விவாதித்துள்ளனர். அதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சென்னை மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் 3 மாதங்களில் இந்த கொள்கை முடிவு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத வாகன நிறுத்தத்தை தடுக்கும் கொள்கையை வகுத்த பின் அதை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai city ,Tamilnadu government ,ICourt ,Chennai ,Tamil Nadu government ,Chennai High Court ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...