×

சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள் மிக அதிகம் தன்னம்பிக்கை, இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி பெறலாம்: தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மாணவன் புவனேஷ் ராம் பேச்சு

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள் மிக அதிகமாக இருக்கும். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, இலக்கை நோக்கி பயணித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என்று தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்த மாணவன் புவனேஷ் ராம் கூறினார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2023ம் ஆண்டுக்கானது) 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ், 37 ஐஎப்எஸ் பதவிகள் மற்றும் 613 குரூப் ஏ பதவிகள் என 1143 பதவிகளுக்கான தேர்வு நடந்தது. முதல்நிலை, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது. இறுதி தேர்வு ரிசல்ட் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் அகில இந்திய அளவில் 1016 பேர் வெற்றி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 42 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். தமிழக அளவில் முதலிடத்தை திருவள்ளூரை சேர்ந்த புவனேஷ்ராம் என்ற மாணவன் பிடித்தார். இந்நிலையில் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 41வது இடம், தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஷ் ராம், 314வது இடத்தை பிடித்த விக்னேஷ், 347வது இடம் பிடித்த அரவிந்த் குமரன் ஆகியோருக்கு பாராட்டு விழா சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ஆவடியில் நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், ஆவடி ஆணையரக போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் பங்கேற்று சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினர். விழாவில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி சங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் முதல் இடத்தை பிடித்த மாணவன் புவனேஷ் ராம் பேசியதாவது: அகில இந்திய அளவில் குடிமை பணி தேர்வில் 41வது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடமும் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலங்களில் தேர்வு எழுதுபவர்கள் கடந்த கால வினாத்தாள்களை படிக்க வேண்டும். எந்தவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு பதில் அளிக்க வேண்டும். பயமின்றி தேர்வை அணுக வேண்டும். இந்த தேர்வில் போட்டிகள் அதிகம் இருக்கும். ஏனென்றால் 10 லட்சம் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில் மிகவும் குறைந்த அளவில் 8000 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட ஒரு சூழல் இருந்து வருகிறது. இருப்பினும் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் அவசியம். இலக்கை நோக்கி பயணித்தால் அனைவரும் எளிதில் வெற்றி பெறலாம். தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு வாழ்த்துக்கள். நான் வெற்றி பெற்றதற்கு பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் என்னை வழி நடத்திய ஆசிரியர்கள் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி தான். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பாராட்டு விழாவில் குடிமை பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் மற்றும் வெற்றி பெற்றவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள் மிக அதிகம் தன்னம்பிக்கை, இலக்கை நோக்கி பயணித்தால் வெற்றி பெறலாம்: தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மாணவன் புவனேஷ் ராம் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bhuvanesh Ram ,CHENNAI ,Bhuvnesh Ram ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...