×

மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் நாகையில் விசைப்படகுகள் பழுது நீக்கும் பணி மும்முரம்

நாகை: மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 14ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்க ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி கடந்த 14ம் தேதி நள்ளிரவு முதல் மீன் பிடி தடைகாலம் துவங்கியது. நாகை மாவட்டத்தில் ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் என்பதால் அக்கரைப்பேட்டை, கல்லார், கோடியக்கரை, நம்பியார் நகர், நாகூர், புஷ்பவனம், ஆற்காட்டுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள துறைமுகங்களில் 740 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் விசைப்படகுகளை பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது: மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு 61 நாட்களுக்கு தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகளை பழுது நீக்கம், வலைகளை சரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளோம். நாகை மாவட்டத்தில் 9,000 மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வேலையிழந்துள்ளோம். மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ்கட்டி தயாரிப்பு, கருவாடு தயார் செய்தல், உப்பு விற்பனை என 80,000 பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்.

ஒரு விசைப்படகை பழுது நீக்கம் செய்ய ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகும். மீன்பிடி தடைக்காலம் முடியும் தருவாயில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து மீண்டும் திறக்கப்படும். இதனால் விசைப்படகுகளுக்கு செலவு செய்து தொழிலை மேம்படுத்துவதா அல்லது குழந்தைகளின் கல்வி கட்டணம் செலுத்துவதா என குழப்பம் மீனவர்களுக்கு ஏற்படும். எனவே விசைப்படகுகளை பழுதுநீக்கம் செய்ய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மானியமாக கடன் வழங்க வேண்டும். விசைப்படகு பழுது நீக்கம் செய்ய ரூ.5 லட்சம் வரை வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடி சார்ந்த பிற தொழில்களையும் பாதுகாக்க நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றார்.

The post மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் நாகையில் விசைப்படகுகள் பழுது நீக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Union Government ,Dinakaran ,
× RELATED இன்று மீண்டும் தொடங்குவதாக இருந்த...