×

தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜ சதித்திட்டத்தின் முன்னோட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: திமுக அறிக்கையில், வினாச காலே விபரீத புத்தி என வடமொழியில் கூட கூறுவார்கள். அதைத்தான் நாம் அழியும் காலத்தில் ஆணவம் தலைவிரித்தாடும் என்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே உணவு என்றெல்லாம் இந்திய துணைக்கண்டத்தில் தங்களுடைய கருத்தைத் திணிப்பதில் வக்கிர புத்தியோடு செயல்படுபவர்கள் பாஜவினர். அவர்களுடைய எண்ணமும், செயலும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குமே அழிவைத் தருவதாகும்.

ஒற்றுமை, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், சுயமரியாதை, ஜனநாயகம், அரசியல் அமைப்புச் சட்டம் இவைகளுக்கெல்லாம் எதிரானவர்கள் பாஜவினர் என தேர்தல் பிரசார காலங்களில் அதிகமாகவே அவர்களுக்கு உணர்த்தினோம்.
ஆனாலும், அவர்கள் உணரமாட்டார்கள். உன்மத்தம் பிடித்தவர்கள் அவர்கள். இதன் வெளிப்பாடுதான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என அறம் பாடிய அய்யன் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள். இதை பலமுறை நாம் தடுத்தும் கூட தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். மீண்டும், மீண்டும் இதை செய்கிறார்கள் என்றால், இது ஆணவம் தானே. இந்த ஆணவம் ஜூன் 4ம் தேதி அழிந்தார்கள் என்பதை புலப்படுத்தும்.

இதைத்தான் தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில், உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவிச்சாயம் பூசினார்கள்; தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீது காவி பெயின்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள்; வானொலி என்ற தூய தமிழ்ப் பெயரை ஆகாஷவாணி என சமஸ்கிருதமயமாக்கினார்கள்; பொதிகை என்ற அழகிய தமிழ்ச் சொல்லையும் நீக்கினார்கள்; தற்போது தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜ சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என கூறப்பட்டுள்ளது.

The post தூர்தர்ஷன் இலச்சினையில் காவிக்கறை அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜ சதித்திட்டத்தின் முன்னோட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,CM M.K.Stal ,CHENNAI ,Vinasa Kale Vipareetha Buddhi ,DMK ,Doordarshan ,Dinakaran ,
× RELATED புதிய அணை தொடர்பான கேரள அரசின்...