×

திண்டிவனம் அருகே இன்று காலை கார்கள் நேருக்கு நேர் மோதல் தம்பதி உள்பட 3 பேர் பலி: 3 பேர் படுகாயம்

வானூர்: திண்டிவனம் அருகே மொளசூரில் இன்று காலை கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று ரேணிகுண்டாவை சேர்ந்த சுதாராமகிருஷ்ணன் மகன் மணிஷ்(30), அவரது மனைவி கீர்த்தி (20) ஆகியோர் புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் இங்குள்ள இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் இன்று காலை சொந்த ஊர் திரும்பினர்.

காரை டிரைவர் ஓட்டிச்சென்றார். புதுச்சேரி- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஒருவழிப்பாதையில் சென்றதால் இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த மணிஷ்(30), அவரது மனைவி கீர்த்தி (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் சென்னையில் இருந்து வந்த காரில் பயணம் செய்த பழனி (50) என்பவரும் பலியானார். அவரது மனைவி ஜெயந்தி (40) மற்றும் இரண்டு கார்களின் டிரைவர்கள் என 3 பேர் படுகாயம் அடைந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post திண்டிவனம் அருகே இன்று காலை கார்கள் நேருக்கு நேர் மோதல் தம்பதி உள்பட 3 பேர் பலி: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Dindivanam ,Vannur ,Molasur ,Telangana ,Hyderabad ,Dinakaran ,
× RELATED தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமானவர்...