×

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5000 அபூர்வ வகை ஆமை பறிமுதல்

 

சென்னை, ஏப்.21: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாட்டிக் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் இறங்கி, கன்வேயர் பெல்டில் வந்த தங்கள் உடமைகளை எடுத்துவிட்டு சுங்கச் சோதனைக்குப் பின்பு வெளியில் சென்றனர். ஆனால், கன்வேயர் பெல்ட்டில் 2 சூட்கேஸ்கள் மட்டும் கேட்பாரற்று கிடந்தன.

இதனைக்கண்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சூட்கேசில் வெடிகுண்டு போன்ற அபாய பொருட்கள் ஏதாவது இருக்குமா என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் மெட்டல் டிடக்டர் மூலம் பரிசோதித்தனர். ஆனால் அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த இரண்டு சூட்கேஸ்களையும் வெளியில் எடுத்து திறந்து பார்த்தனர்.

அதில் அபூர்வ வகை சிவப்பு காதுகள் உடைய நட்சத்திர ஆமை குஞ்சுகள் உயிருடன் இருந்தன. இரண்டு சூட்கேசுகளிலும் 5,000 ஆமை குஞ்சுகள் இருந்தன. தகவலறிந்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் வந்து ஆமை குஞ்சுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய வன உயிரினங்கள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த பிரிவினர், சென்னை விமான நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அபூர்வ வகை ஆமைக்குஞ்சுகளை கடத்தி வந்த மர்ம ஆசாமி யார் என்று தெரியவில்லை. கடத்தல் ஆசாமி, சுங்க அதிகாரிகள் சோதனைக்கு பயந்து ஆமை குஞ்சுகளுடன் கூடிய சூட்கேசுகளை, கன்வேயர் பெல்ட்டிலேயே விட்டு விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து ஒன்றிய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், இந்த ஆமைக்குஞ்சுகள் மூலம் வெளிநாட்டு நோய்க்கிருமிகள், இந்தியாவில் பரவிவிடும்.

எனவே இவைகளை எந்த விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் பாட்டிக் பயணிகள் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த ஆமை குஞ்சுகளை மலேசியாவுக்கு சுங்க அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். மேலும் இது சம்பந்தமாக சுங்க அதிகாரிகள் வழக்குப் பதிந்து, விமான நிலையம் வருகைப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.

The post மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5000 அபூர்வ வகை ஆமை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Malaysia ,Chennai ,Patik Airlines ,Kuala Lumpur ,Chennai airport ,
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...