×

அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கு: ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அறுவை சிகிச்சை மூலம் 3ம் பாலினத்தவராக மாறுபவர்கள் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது அவர்கள் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பாஸ்போர்ட் விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்ற அரசு சாரா அமைப்பை சேர்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில், இந்த விதி அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள சம உரிமைக்கு எதிரானது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக அறுவை சிகிச்சை மூலம் மூன்றாம் பாலினத்தவர்களாக மாறுபவர்களிடம் பாஸ்போர்ட் விதியை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆணாக பிறந்த சென்னையை சேர்ந்த ஒருவர் பெண்ணுக்குரிய தன்மை உள்ளது தெரிந்ததும் பெண்ணாக மாறுவதற்காக ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2007ல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு 3ம் பாலினத்தவர் நல வாரியத்தின் அடையாள அட்டை உள்ளது. ஆதாரிலும் அவர் 3ம் பாலினத்தவர் என்று உள்ளது. அவர் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தபோது அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சான்றிதழ் இணைக்காததால் பரிசீலிக்கப்படவில்லை.

கடப்பாவில் அவர் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை தற்போது இல்லை. இதையடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவரின் சான்றிதழை தாக்கல் செய்தும் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அந்த பிரிவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பூங்குழலி ஆஜராகி, அரசு அங்கீகாரம் பெற்ற தகுதியுள்ள மருத்துவரின் சான்றிதழை இணைத்தாலே போதுமானது என்று வெளியுறவு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அதற்கு ஒன்றிய அரசு வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், இயற்கையிலேயே 3ம் பாலினத்தவராக இருந்தால் இந்த விதி பொருந்தாது. அறுவை சிகிச்சை மூலம் மாறும் 3ம் பாலினத்தவருக்கு மருத்துவமனையின் சான்றிதழ் கட்டாயம் என்றார். இதையடுத்து, ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

The post அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் சிகிச்சை சான்றிதழை இணைக்க கோரும் பாஸ்போர்ட் விதியை எதிர்த்த வழக்கு: ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union govt ,CHENNAI ,Sivakumar ,Mylapore ,Union government ,ICourt ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...