×

ம.பியில் 3வது கட்ட தேர்தல் திக்விஜய் சிங், சிந்தியா உட்பட 144 வேட்பாளர்கள் போட்டி

போபால்: மத்தியப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 மக்களவை தொகுதிகளில் முதல் கட்டமாக 6 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக வருகிற 26ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகின்றது. இந்நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடக்க இருந்த பீடல் தொகுதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மே 7ம் தேதி நடைபெற இருந்தது. தற்போது பீட்டல் தொகுதியையும் சேர்த்து 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் குனா மற்றும் விதிஷா தொகுதிகளில் பாஜ சார்பில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் மற்றும் மாநிலங்களவை எம்பியான திக்விஜய் சிங் ராஜ்கர்தொகுதியில் போட்டியிடுகிறார்.

3வது கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. 9 தொகுதிகளுக்கு 144 வேட்பாளர்கள் மொத்தம் 223 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதேபோல் மகாராஷ்டிராவில் பாராமதி, சதாரா தொகுதிகள் உட்பட 11 மக்களவை தொகுதிகளிலும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 361 வேட்பாளர்கள் வேட்பு தாக்கல் செய்துள்ளனர். இதேபோல் குஜராத்தில் 26 தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேட்சையாக 491 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜ மாநில தலைவர் சிஆர் பாட்டில், காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த சைதார் வசவாஉள்ளிட்டோர் கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள்.

 

The post ம.பியில் 3வது கட்ட தேர்தல் திக்விஜய் சிங், சிந்தியா உட்பட 144 வேட்பாளர்கள் போட்டி appeared first on Dinakaran.

Tags :
× RELATED டெல்லியில் நடக்கிறது பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதிஆயோக் கூட்டம்