×

காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஆலங்கட்டி மழை; நெல்மணிகள், தானியங்கள் சேதம்..!!

காஷ்மீர்: காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கர்னால், மணாலி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டிய கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இமாச்சல்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், ஏப்ரல் தொடக்கத்தில் வெப்பநிலை இயல்பாக இருக்கும் என்றும் ஏப்ரல் இறுதி வாரம் முதல் மே மாதம் வரை வெயில் வாட்டி வதைக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் வானிலை மாற்றம் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், இமாச்சலின் சிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களில் ஐஸ் கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்தது. மணாலியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரங்கள் விழுந்ததில் கார், ஜீப் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் கலாணி, சட்டோ கிராமங்களை இணைக்கும் ஆற்றுப்பாலம் சேதமடைந்தது. உள்ளூர் அதிகாரிகள் பாலத்தை மறு சீரமைத்ததையடுத்து ஆற்றுப்பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கியது.

அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐஸ் கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் உணவு தானிய சேமிப்பு கிடங்கு முன்பு திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள், தானியங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், பாட்டியாலா உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழையும், பிற இடங்களில் கனமழையும் பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஆலங்கட்டி மழை; நெல்மணிகள், தானியங்கள் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : KASHMIR ,IMACHAL ,PUNJAB ,ARIANA ,Haryana ,Karnal ,Manali ,IMACHAL PRADESH ,JAMMU ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!