×

சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை, ஏப்.20: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடந்தது. வாக்காளர்கள் ேநற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை வரிசையில் நின்று செலுத்தினர்.
சென்னையில் நேற்று காலை முதல் மந்தமாக வாக்குப்பதிவு நடந்தது. இருந்தாலும் மாலையில் அதிகளவில் பொதுமக்கள் வாக்கு செலுத்தினர்.சென்னை காவல் எல்லையில் 20 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் 9 கம்பெனி துணை ராணுவம், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று காலை மந்தைவெளியில் உள்ள புனித லாசர் நடுநிலை பள்ளியில் தனது மனைவி மற்றும் மகளுடன் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.

அதைதொடர்ந்து ஷெனாய் நகர் ஈவெரா சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, பெரம்பூர் அருந்ததி நகர் சாந்தி நகர் பகுதியில் உள்ள எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி, மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் உயர்நிலை பள்ளி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் தடையின்றி வாக்களிக்க ஏதுவாக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தி உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ராத்தோர் அளித்த பேட்டி: சென்னை காவல் எல்லையில் வடசென்னை, மத்திய ெசன்னை, தென் சென்னை ஆகிய 3 தொகுதிகள் வருகிறது. அதுதவிர ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் தொகுதிகளில் பாதி வருகிறது. மொத்தம் 24 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது. பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மொத்தம் 5 ஆயிரம் வாக்கு பதிவு மையங்கள் உள்ளது. இதில் 310 பதற்றமான வாக்கு சாவடி மையங்கள் மற்றும் 23 மிக பதற்றமான வாக்கு சாவடி மையங்கள். அந்த இடங்களில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 69 இடங்களில் வாக்கு பதிவுகளின் போது பிரச்னை நடந்தது. அந்த இடங்களை தற்போது அடையாளம் கண்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 400 இடங்களில் மொபைல் படையினர் பணியில் ஈடுபட்டனர். அதில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை என 1000 வாகனங்களில் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பொறுத்தமட்டில் 20 காவலர்கள் தேர்தல் தொடர்பாக பணியில் உள்ளனர். இந்த பாதுகாப்பு இரவு வாக்கு பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு கொண்டு செல்லும் வரை இருக்கும். ஓட்டு எண்ணும் இடங்களான லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி என 3 இடங்களில் வாக்கு பதிவு முடிந்த உடன் வாக்கு பதிவு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்சென்று சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் வைத்து சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முதலடுக்கில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர், 2வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 3 வது அடுக்கில் ஆயுதப்படை காவலர்கள், 4வது அடுக்கில் பெருநகர போலீசார் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் நாட்கள் வரை பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். சென்னை காவல் எல்லையில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் பிரச்னை இருந்தது. அதுவும் சரிசெய்யப்பட்டது. ெசன்னையில் 23 இடங்களில் உள்ள பதற்றமான வாக்கு சாவடிகள், மற்றும் 110 இடங்களில் உள்ள வாக்கு சாவடிகள் என மொத்தம் 133 இடங்களில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு பணி வாக்கு எண்ணும் நாட்கள் வரை நீடிக்கும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.

The post சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,Tamil Nadu ,Sandeep Roy Rathore ,Dinakaran ,
× RELATED இருசக்கர வாகனங்களின் நம்பர்...