×

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல் பொதுமக்களோடு சேர்ந்து வாக்களித்த மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள்

திருவள்ளூர், ஏப். 20: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின் பேரில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தின் முதல் தொகுதியாக இருப்பது திருவள்ளூர் தனி தொகுதி ஆகும். நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை ஒவ்வொரு தொகுதிக்கும் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி தமிழகத்தின் முதல் நாடாளுமன்ற தொகுதியான திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம் ஆகிய தொகுதிகள் அடங்கும். திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 10 லட்சத்து 24 ஆயிரத்து 149 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து, 61 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 385 பேர் உள்பட மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமாக திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 2,256 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன.

திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருவள்ளூர் கலெக்டர் த. பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வந்த மாற்றுத்திறனாளிக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார். திருவள்ளுர் தனி தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு மொத்தமாக 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னால் இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்படுகிறது. மொத்தமாக தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன‌ர். திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பாண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது மனைவி இந்திராவுடன் தனது வாக்கினைப் பதிவு செய்தார். மாநில ஆதிதிராவிட நலகுழுச் செயலாளர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பட்டாபிராமில் உள்ள ஹோலி இன்பேன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தனது மனைவி மாலதி கிருஷ்ணசாமியுடன் வாக்கினைப் பதிவு செய்தார். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கவரப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ தனது வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். திருவள்ளூர் நகராட்சி ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சர், அதிமுக மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா தனது மனைவி லதாவுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி புரசைவாக்கம் மிகப்பெரிய உள்ள அரசினர் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பாஜக வேட்பாளர் பொன்வி பாலகணபதி விருதுநகர் மாவட்டம், பரமக்குடி அடுத்த செக்காவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

100 வயதிலும் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வாக்களிப்பு
பொன்னேரி, ஏப்.20 : பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்தில் வல்லூர் கிராமத்தில் 100 வயதுடைய முதியவர் தனது வாக்கினை ஜனநாயக முறைப்படி வாக்களித்தார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வல்லூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (100). இவர், 1954ம் ஆண்டு தொடங்கி காமராஜர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தனது ஜனநாயக கடமையான வாக்குரிமையை செலுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளருக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வீட்டின் அருகாமையில் உள்ள பூத் எண் 220 க்கு சென்று தனது வாக்கினை செலுத்திவிட்டு கையை உயர்த்தி காண்பித்து 100 வயதிலும் ஜனநாயக கடமையான வாக்களிப்பது அனைவரின் கடமை என அனைவருக்கும் உணர்த்தினார்.

The post திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல் பொதுமக்களோடு சேர்ந்து வாக்களித்த மாவட்ட கலெக்டர், எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Separate ,Election District ,Election Commission of India ,2024 parliamentary elections ,Tamil Nadu ,Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் அருகே தொழிற்சாலை வாகனங்கள் மோதி 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம்