×

திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட செயலாளர் பிரியாணி சாப்பிடுகிறீர்களா என பரஸ்பரம் உபசரிப்பு கண்ணமங்கலம் அருகே சுவாரஸ்யம்

கண்ணமங்கலம், ஏப்.20: கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு வாக்கு சாவடியில் திமுக ஒன்றிய செயலாளரும், அதிமுக மாவட்ட செயலாளரும் பிரியாணி சாப்பிடுகிறீர்களா என பரஸ்பரம் உபசரித்து கொண்ட சுவரஸ்மான சம்பவம் நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அப்போது, கட்சி பிரமுகர்கள் வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நிலவரத்தை நேரில் பார்வையிட்டனர். இதன்படி திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் இருந்த வாக்கு சாவடியில் திமுக மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் மாதவன், துணைச்செயலாளர் தேங்காய்மண்டி ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதா, மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் ராஜி, கிளைச்செயலாளர் லோகநாதன் ஆகியோர் அங்கு வந்தனர். நேருக்கு நேர் சந்தித்து கொண்ட இரு தரப்பினரும் சிரித்துக் கொண்டு அன்புடன் வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து கொண்டனர். மேலும் மதிய உணவு நேரம் என்பதால் ஒருவருக்கொருவர் பிரயாணி சாப்பிடுகிறீர்களா என பரஸ்பரம் விசாரித்தனர். அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் இரண்டு கட்சி நிர்வாகிகளும் அரசியல் நாகரிகத்துடன் அன்புடன் நடந்து கொண்டதை பார்த்து அங்கு வாக்களிக்க வந்திருந்த வாக்காளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

The post திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட செயலாளர் பிரியாணி சாப்பிடுகிறீர்களா என பரஸ்பரம் உபசரிப்பு கண்ணமங்கலம் அருகே சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : DMK union ,AIADMK district ,Kannamangalam ,Kongarambatu ,Tamil Nadu ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்