×

தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தலைவர்கள் உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று வாக்களித்த பின் தலைவகள் உறுதியாக தெரிவித்து உள்ளனர்.
வைகோ: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அடுத்துள்ள கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் சுமார் அரை மணி நேரம் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். பின்னர் வைகோ அளித்த பேட்டி: இந்த தேர்தல் இந்திய ஜனநாயகத்தை காக்க நடக்கும் தேர்தலாகும். பாசிச எண்ணம் கொண்ட, பிரதமர் மோடி இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்து தானே அதிபராக துடிக்கிறார். அதற்கான திட்டமும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் உள்ளது. அதை செயல்படுத்தும் வகையில் பிரதமர் செயல்பட்டு வருகிறார். எனவே இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

முத்தரசன்: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் வேளூர் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் மக்களிடம் ஒரு எழுச்சியை காண முடிகின்றது. இந்த எழுச்சியானது மாற்றத்துக்கானது. கடந்த 10 ஆண்டு காலத்தில் மக்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் அநீதிகள், அடக்குமுறைகள் அனைத்துக்கும் எதிராக மக்கள் வாக்களித்து, ஒன்றியத்தில் ஒரு மாற்று ஆட்சியை புதிய ஆட்சியை உருவாக்கும் மக்கள் எழுச்சியோடு அதிகாலை நேரத்திலேயே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, வரிசையாக நின்று வாக்களித்த அற்புதமான காட்சியை பார்க்க முடிந்தது. நிச்சயமாக, உறுதியாக நாட்டில் மாற்றம் ஏற்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

கே.பாலகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சிதம்பரம் நகரில் உள்ள மானா சந்து வாக்குச் சாவடியில் தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்தார். பின்னர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்காளர்கள், பொதுமக்கள் தெளிவாக இருக்கின்றனர். கடந்த 2019ல் மோடி பெற்ற வெற்றியை இப்போது பெற முடியாது.

திருமாவளவன்: சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தனது தாயாருடன் வந்து வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த தேசத்தை மீட்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து தொடங்குகிறோம் என்பதற்கான நாள்தான் இந்த வாக்குப்பதிவு. தமிழக மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். ஒன்றியத்தில் பாஜ ஆட்சி தூக்கி எறியப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

ப.சிதம்பரம்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, கண்டனூர் பேரூராட்சியில் உள்ள சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வாக்களித்தார். பின் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா கூட்டணி வென்றால் நாட்டின் பன்முகத்தன்மை காப்பாற்றப்படும். கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை நாங்கள் நிச்சயம் சீரமைப்போம். அனைத்து சிறுபான்மையினர், மத சார்பின்மை, மொழி சிறுபான்மை, பழக்கவழக்கம், வரலாறு கலாச்சாரம் ஆகியவற்றை காப்பாற்றுவதுதான் பன்முகத்தன்மையாகும். இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி. யாரும் உடைக்க முடியாது. மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

காதர் மொய்தீன்: திருச்சி காஜாமியான் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதல்வர் இந்த 39 தொகுதிகளையும் கைப்பற்றி இந்தியா கூட்டணிக்கு மிகுந்த பலம் சேர்ப்பார். அதேசமயம் இந்த தேர்தலில் பாஜவின் பரப்புரை ஒருபோதும் எடுபடாது. மீண்டும் அவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு சாத்தியமே இல்லை.

துரை வைகோ: சொந்த ஊரில் வாக்களித்த பின் துரை வைகோ கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. இதனால் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பாவில் தற்போதும் வாக்குச்சீட்டு முறை அமலில் உள்ளது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு முறை இல்லை. மின்னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏற்கனவே இருந்ததுபோல் வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் அமல்படுத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.

வேல்முருகன்: கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியம் புலியூர் காட்டுசாகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் த.வா.க. தலைவர் வேல்முருகன் தனது வாக்கை செலுத்தினார். பின்னர் அவர் பேட்டி: தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களில் மகத்தான வெற்றிபெறும். ஒன்றிய பாசிச பாஜ அரசு கொடுமையான மிக மோசமான சட்ட வரம்பு மீறல்களை செய்து கொண்டிருக்கின்றது. தமிழக மக்கள் மிகச்சிறந்த முடிவை எடுப்பார்கள்.

* ‘ஜனநாயகம் காக்க ஓட்டு’
நெல்லை மாவட்டம், பணகுடி அருகே லெப்பைகுடியிருப்பு, பெரியநாயகிபுரத்தில் உள்ள ஏடிஎச் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7.20 மணிக்கு சபாநாயகர் அப்பாவு, அவரது மனைவி விஜயா, மகன் அலெக்ஸ் அப்பாவு, மற்றொரு மகன் ஆரோக்கிய ராகுல் ஆகியோருடன் வந்து முதலாவதாக வாக்குப்பதிவு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் உலகுக்கு எடுத்துக் காட்டாக ஜனநாயக முறைப்படி நடைபெறும் இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். ஜனநாயகம் தழைக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார்.

The post தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தலைவர்கள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Chennai ,Vaiko ,Madhyamik ,General Secretary ,Principal Secretary ,Durai Vaiko ,Tiruvenkadam ,Tenkasi district ,
× RELATED மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி...