×

ஜனநாயக கடமையாற்ற ஆர்வம் மினி லாரியை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மினி லாரியில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் சிலர் பயணம் மேற்கொண்டு சொந்த ஊர்களுக்கு சென்றனர். தமிழகம் மற்றும் புதுவை உள்பட 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் கையெழுத்து இயக்கம், மனிதச்சங்கிலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குடிநீர் கேன்கள், காஸ் சிலிண்டர்கள் ஆகியவற்றில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு கட்டாயம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிலையில், செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டவர்கள் சிதம்பரம், ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளுக்குச் செல்ல நேற்று அதிகாலை பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது, தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பேருந்து நிலையத்திற்குள் வந்து நின்றவுடன் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறியவர்கள் இருக்கைகளை பிடித்து அமர்ந்தனர். இதனால் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சிலர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்று மினி லாரி ஒன்றை வாடகைக்கு ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். அப்போது, பஸ் நிலையத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றும், ஜனநாயக கடமையாற்ற வாக்களிக்க செல்கிறோம் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post ஜனநாயக கடமையாற்ற ஆர்வம் மினி லாரியை வாடகைக்கு பிடித்து சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Democratic ,Chennai ,Tamil Nadu ,Puduwa ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பி...