×

அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை

டெல்லி: நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லியில் இன்று நடைபெறும் 35வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத்அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி முதல் லீக் சுற்றுக்கான 7 ஆட்டங்களிலும் விளையாடி விட்டது. ஆனால், ஒன்றில் கூட சொந்த களமான டெல்லியில் இன்னும் விளையாட வில்லை. டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் மகளிர் ஐபிஎல் போட்டி நடந்து முடிந்த பிறகு, சீரமைப்பு பணிகள் நிறைவடைய தாமதமானது.

அதனால் டெல்லி களத்துக்கான ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் நடந்தன. இப்போது டெல்லி அரங்கம் முழுமையாகத் தயாராகிவிட்ட நிலையில், இன்று டெல்லி – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் அங்கு நடைபெற உள்ளது. ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை, லக்னோ, முன்னாள் சாம்பியன் குஜராத் அணிகளை வீழ்த்தியுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது.

இன்னும் 7 ஆட்டங்களில் மட்டும் விளையாட வேண்டிய நிலையில், டெல்லிக்கு தொடர் வெற்றி அவசியம். அவற்றில் 5 ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன. வார்னர், ஷா, ஃபிரேசர், ஹோப், பன்ட், அக்சர் அதிரடிக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். கலீல் அகமது, இஷாந்த், முகேஷ் வேகமும், குல்தீப் – அக்சர் சுழல் கூட்டணியும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கின்றன. அதே சமயம் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் சாதனை வெற்றிகளுடன் உற்சாகமாக களமிறங்குகிறது.

அந்த அணி 6 ஆட்டங்களில் 4ல் முன்னாள் சாம்பியன் மும்பை, நடப்பு சாம்பியன் சென்னை, பஞ்சாப், பெங்களூரு அணிகளை வீழ்த்திய நிலையில், கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் போராடி தோற்றது. அபிஷேக், ஹெட், கிளாஸன், மார்க்ரம், அப்துல் சமத், நிதிஷ் ரெட்டியின் அதிரடி அணிக்கு பெரும் பலம். கம்மின்ஸ், குமார், ஷாபாஸ், நடராஜன், உனத்கட் பந்துவீச்சும் நம்பிக்கை அளிக்கிறது. இரு அணிகளுமே புள்ளிப் பட்டியலில் மேலும் முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இரு அணிகளும் 23 முறை மோதியுள்ளதில் ஐதராபாத் 12, டெல்லி 11ல் வென்றுள்ளன.

* அதிகபட்சமாக ஐதராபாத் 219, டெல்லி 207 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக ஐதராபாத் 116, டெல்லி 80 ரன் எடுத்துள்ளன.

The post அருண் ஜெட்லி அரங்கம் தயார்: டெல்லி – ஐதராபாத் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Arun Jaitley Arena ,Delhi ,Hyderabad ,IPL ,Delhi Capitals ,Sunrisers ,Arun Jaitley Stadium ,Dinakaran ,
× RELATED போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம் லக்னோவை வீழ்த்தியது டெல்லி