×

ஈரான் அணு மின் நிலையம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம்

துபாய்: ஈரானின் அணு மின் நிலையத்தை குறி வைத்து இஸ்ரேல் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அணு மின் நிலையத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலின், 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும்,பாலஸ்தீன ஹமாஸ் படைக்கும் இடையே 6 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். அதே போல் செங்கடலில் செல்லும் கப்பல்களின் மீது ஈரானை ஆதரிக்கும் ஹவுதி போராளிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. கடந்த 1ம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசியதில் ஈரானிய புரட்சிகர காவல் படையின் தளபதி, துணை தளபதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு பழி வாங்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த 13ம் தேதி இஸ்ரேலை நோக்கி 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், டிரோன்களை ஈரான் ஏவியது. இதில் 99 சதவீத ஏவுகணைகள், டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்த தாக்குதலுக்காக ஈரான் மீது பதிலடி கொடுக்க வேண்டாம் என ஐநா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் இஸ்பஹான் நகரில் இஸ்ரேல் நேற்று டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. இஸ்பஹான் நகரில் உள்ள மிக பெரிய அணு மின் நிலையத்தை குறி வைத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் அணுமின்சக்தி நிலையத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்று ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலையடுத்து, இஸ்பஹான், டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஏவிய 3 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்த அதே சமயத்தில் இஸ்ரேலின் ராணுவ விமானங்கள் சிரியாவின் தெற்கு மாகாணமான டாராவில் உள்ள ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதாக சிரியாவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.ஈரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.

The post ஈரான் அணு மின் நிலையம் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல்: மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Iran ,nuclear power ,West Asia ,Dubai ,Palestine ,Hamas ,Dinakaran ,
× RELATED கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்