×

நீரிழிவு பாதித்துள்ள கெஜ்ரிவால் இனிப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

புதுடெல்லி: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் சர்க்கரை நிறைந்த உணவை சாப்பிடுகிறார் என நீதின்றத்தில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அவருடைய சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால், குடும்ப மருத்துவரை காணொளி வாயிலாக அணுகி ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை சிறப்பு நீதிபதி இரு தினங்களுக்கு முன்பாக விசாரித்தார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிறையில் அத்தகைய நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளன. அங்கு கெஜ்ரிவாலை பரிசோதிக்கலாம் என்று கூறினார். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை வக்கீல் வாதிடுகையில், ‘கெஜ்ரிவால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிக சர்க்கரை உள்ள உணவை உட்கொள்கிறார். அவர் தினமும் பூரி, மாம்பழம், இனிப்புகளை அதிகம் உட்கொள்கிறார். அவர் மருத்துவ ரீதியாக ஜாமீன் பெறுவதற்காகவே இது போன்று சாப்பிடுகிறார்’ என குற்றம்சாட்டினார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் உணவு அட்டவணை அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

* கெஜ்ரிவாலை கொல்ல சதி: ஆம் ஆத்மி
கெஜ்ரிவால் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்களை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர் அதிஷி கூறுகையில்,‘‘கெஜ்ரிவால் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறார் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒரு பெரிய பொய்யை தெரிவித்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவதை தடுக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை இதை தெரிவித்துள்ளது.

அவர் தேநீர் அருந்துவதற்கு செயற்கை இனிப்பைதான் பயன்படுத்துகிறார். இதெல்லாம் அவருக்கு வீட்டில் இருந்து உணவை கொண்டுவருவதை தடுக்கும் முயற்சி. இதை தடுத்து விட்டால் அவருக்கு என்ன உணவு கொடுக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது. சிறையில் அவரை கொல்ல சதி நடக்கிறது’’ என்றார்.

The post நீரிழிவு பாதித்துள்ள கெஜ்ரிவால் இனிப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Enforcement Directorate ,New Delhi ,Chief Minister ,Tihar Jail ,Enforcement department ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு