×

அரபு நாடுகளில் வரலாறு காணாத கனமழை 2வது நாளாக 12 விமானங்கள் ரத்து

சென்னை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று 2வது நாளாக துபாய், குவைத், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து துபாய் செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள்,

நேற்று அதிகாலை சென்னை வந்து விட்டு, மீண்டும் துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சென்னையில் இருந்து துபாய் சென்று விட்டு, மீண்டும் துபாயிலிருந்து நேற்று காலை சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நேற்று முன்தினம் துபாய் சென்று விட்டு நேற்று அதிகாலை சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ஆகிய 8 துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மேலும், நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து குவைத் சென்று விட்டு, நேற்று காலை குவைத்தில் இருந்து சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானங்களும், அதேபோல் சார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்து விட்டு மீண்டும் சார்ஜா செல்ல வேண்டிய ஏர் அரேபியா விமானங்களும் என மொத்தம் 12 விமானங்கள் 2வது நாளாக நேற்று ரத்து செய்யப்பட்டன. இதுதவிர அபுதாபி, சார்ஜா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் ஒரு சில விமானங்கள், பல மணி நேரங்கள் தாமதமாக சென்னை வந்து விட்டு மீண்டும் சென்னையில் இருந்து தாமதமாக புறப்பட்டன.

இதனால் ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள், சென்னை விமான நிலையத்தில் பெரும் தவிப்பிற்குள்ளாகினர். நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு செல்ல வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டதால், அந்த விமானத்தில் பயணிக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஆத்திரமடைந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாங்கள் வெளியூர்களில் இருந்து வந்திருக்கிறோம். இப்போது திடீரென விமானம் ரத்து என்று அறிவித்தால், குழந்தைகளுடன் இருக்கும் நாங்கள் இரவில் எங்கு போய் தங்குவோம், எங்களுக்கு முன்னதாகவே ஏன் அறிவிக்கவில்லை என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஏர்லைன்ஸ் அதிகாரிகள், அரபு நாடுகளில் மழை இன்னும் தொடர்ந்து பெய்வதால் பயணிகள் பாதுகாப்பு காரணமாகவே விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அங்கு வானிலை சீரடைந்ததும், உடனடியாக விமான சேவைகள் மீண்டும் தொடங்கும். இப்போது விமானம் சேவை ரத்தாகி உங்களை அவதிப்பட வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என வருத்தம் தெரிவித்தனர்.
ஆனாலும் பயணிகள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post அரபு நாடுகளில் வரலாறு காணாத கனமழை 2வது நாளாக 12 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dubai ,Kuwait ,Sharjah ,United Arab Emirates ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை...