×

ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர்: காவல்துறை தகவல்

கோவை: ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. காணாமல்போன தன்னுடைய சகோதரரை மீட்டுத் தரக் கோரி திருமலை என்பவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி திருமலை. இவர் காணாமல்போன தனது சகோதரரை மீட்டுத்தரகோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா கோவை மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையம் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வழக்கில் காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், கடந்த 2016ம் ஆண்டு முதல் வெவ்வேறு தேதிகளில் 6 பேர் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். காணாமல் போனவர்கள் குறித்த விசாரணையை விரைவு படுத்த உத்தரவிட்ட நீதிபதி, அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள், தன்னார்வலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

The post ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6 பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டனர்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Isha Center ,Isha Centre ,Thirumalai ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பரபரப்பு; நடுரோட்டில்...