×

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது

தஞ்சாவூர், ஏப். 18: தஞ்சாவூர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நாளை தமிழகம், அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக, தேமுதிக, பாஜக, நாதக மற்றும் சுயட்சிகள் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் அவர்கள் அனைவருக்கும் சின்னங்களும் ஓதுக்கப்பட்டு அனைவரும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 17ம் தேதி மாலை 6 மணியுடன் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. எனவே மக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசை நிகழ்ச்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் கூடாது என்றும், மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளுக்கான நட்சத்திர பேச்சாளர்களின் வாகன அனுமதிகள் நேற்று மாலை 6 மணிக்கு பின் காலாவதியாகிவிடும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் அரசியல் கட்சிகள் காலையிலேயே வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மாரியம்மன் கோவில் ஊராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மாரியம்மன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட ஞானம் நகர் தனியார் பள்ளியில் வாக்கு செலுத்த ஏதுவாக துணிகளில் அலங்கார பந்தல் போடப்பட்டுள்ளது. மாரியம்மன் கோவில் ஊராட்சியில் அந்த 3 பள்ளிகளில் வாக்காளர்கள் வாக்கு செலுத்துவார்கள்.

இந்த நிலையில் அந்த வாக்கு சாவடி மையங்களில் பெண்கள், முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் வாக்கு செலுத்த எந்த ஒரு கஷ்டங்களும் படாத நிலையில் பந்தல், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின் விசிறி, மின் விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு முன்மாதிரியான வாக்கு சாவடிகளாக மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடிகளில் எந்த ஒரு வாக்குசாவடிகளிலும் இல்லாத அளவிற்கு மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்றத்தில் உள்ள வாக்கு சாவடி முன் மாதிரியான வாக்கு சாவடியாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் ஊராட்சியில் அனைத்து தேர்தலிலும் இது போன்று வாக்கு சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்கு சாவடிகளில் சுமார் 12,000 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் 116 பதட்டமான வாக்குச் சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்கள் தேர்வு மற்றும் மாவட்டத்தில் 2,308 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 11,353 வாக்குப் பதிவு அலுவலர்களையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருப்பதை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிகேட்டோ சேம மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிரவீனா குமாரி , கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தமிழ்நங்கை , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தையல் நாயகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், தேர்தல் வட்டாட்சியர் அழகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur Lok Sabha elections ,Election Commission ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...