×

ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் மூன்றாண்டு ஆட்சியில் ஒளிரும் தமிழகம்: பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு; பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

தொழில்துறை முதலீடுகள், வேலை வாய்ப்புகள், கல்வி, சுகாதார வசதிகள் என அனைத்திலும் சிறப்பான இடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக உருவாக்குவது, தொழில்துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதார மாநிலமாக உருவாக்குவதே இலக்கு என, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 2 நாளில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் நேரடியாகவும் மறை முகமாகவும் 26.9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். இதுபோல் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ₹3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. தமிழகத்துக்கு வந்த மற்றும் வர உள்ள திட்டங்களும், வேலைவாய்ப்புகளும் வருமாறு:

ஹூண்டாய் ₹26,000 கோடி
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை சென்னை அருகே இருங்காட்டுகோட்டையில் அமைந்துள்ளது. இந்த ஆலையை ரூ.26,000 கோடி முதலீட்டில் மேம்படுத்த செய்ய அந்த நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் கடந்த 2023 மற்றும் 2024ல் இரண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. தொழிற்சாலை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், பேட்டரி கார்கள், மின்வாகன பேட்டரி, மின்வாகன சார்ஜிங், நிலையங்கள் அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு இந்த தொகை பயன்படும்.

ஜெஎஸ்டபிள்யூ எனெர்ஜி ₹10,000 கோடி
ஜெஎஸ்டபிள்யூ எனெர்ஜி ₹10,000 கோடியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கார்னிங் க்ளாஸ் ₹1,003 கோடி
செல்போன்களில் பயன்படுத்தப்படும் கீறல் விழாத கொரிலா கண்ணாடிகள் தயாரிக்கும் ஆலையை காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கத்தில் அமெரிக்காவின் கார்னிங் இன்டர்நேஷனல் நிறுவனம் அமைக்கிறது. ரூ.1003 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலையால் 840 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.

டாடா பவர் ₹70 ஆயிரம் கோடி
டாடா பவர் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹70,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்த முதலீடு அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நடக்கும். தமிழ்நாட்டில் 10 ஜிகாவாட் திறன்கொண்ட சோலார் மற்றும் காற்றாலை திட்டத்தை டாடா பவர் அமைக்க உள்ளது.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் ₹7000 கோடி
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தனது ஆலையை ரூ.7000 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

மகிந்திரா ஹாலிடேஸ் ₹800 கோடி
சுற்றுலா பயணிகளை ஈர்க்க புதிய ரெசார்டுகளை ரூ,800 கோடி முதலீட்டில் மகிந்திரா ஹாலிடேஸ் அமைக்கிறது. இந்த ரெசார்டுகள் கல்பாக்கம்(காஞ்சிபுரம்), ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, கும்பகோணம், ராமேஸ்வரத்தில் அமையும். இதன் மூலம் 1500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும்.

க்ராக்ஸ் ₹2440 கோடி
உலகின் முன்னணி காலணி பிராண்டான க்ராக்ஸ், இப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. 2028ம் ஆண்டுக்குள் மொத்தம் ரூ.2440 கோடியை முதலீடு செய்ய இந்த ஆலையை நடத்தும் போனிக்ஸ் கோத்தாரி புட்வேர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அப்போது 29,400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

வின்பாஸ்ட் பேட்டரி கார் ஆலை ₹16,000 கோடி
வியாட்நாமை தலையிடமாக கொண்ட வின்பாஸ்ட் நிறுவனம், பேட்டரி கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம், தூத்துக்குடியில் ₹16,000 கோடியில் பேட்டரி கார் தொழிற்சாலையை அமைக்கிறது. இதற்காக அடிக்கல்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் நாட்டினார். இந்த ஆலை முழுமையாக செயல்படும்போது 10,000 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

குவால்காம் ₹177 கோடி
செல்போன்களில் பயன்படுத்தப்படும் சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனம் குவால்காம். இந்த நிறுவனம் ஏற்கனவே சென்னையில் கால் ஊன்றி உள்ளது. தற்போது சென்னையில் ₹177 கோடி முதலீட்டில் புதிய வடிவமைப்பு மையத்தை அமைக்க உள்ளது. 5 ஜி போன்களுக்காக தொழில்நுட்பததை உருவாக்குவதில் இந்த மையம் முனைப்போடு செயல்படும். இந்த மையத்தில் மொத்தம் 1,600 இன்ஜினியர்கள் பணியில் இருப்பார்கள்.

டைட்டன் இன்ஜினியரிங் ₹430 கோடி
டாடா குழுமத்தின் டைட்டன் இன்ஜினியரிங் & ஆட்டோமேஷன் லிமிடெட் ஓசூரில் 430 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில் 200 கோடி ரூபாயை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யச் சிலிக்கான் வேஃபர் டேப் உபகரணங்களை உற்பத்தி செய்ய முதலீடு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள ₹230 கோடி நிறுவனம் ஆட்டோமேஷன் மற்றும் உற்பத்தி சேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.

பேங்க் ஆப் அமெரிக்கா
உலகின் மிகபெரிய வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் அமெரிக்கா, சென்னை தரமணியில் 11 லட்சம் சதுரடியில் மிகப்பெரிய அலுவலகத்தை அமைக்க உள்ளது. இது அந்த வங்கியின் மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாக திகழும்.

போயிங்
அமெரிக்காவை சேர்ந்த போயிங் விமான தயாரிப்பு நிறுவனம். சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. மொத்தம் ரூ. 300 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த மையத்தில் 1,100 தலைசிறந்த இன்ஜினியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஏற்கனவே சென்னையில் உள்ள போயிங் நிறுவன மையத்தில் 700 பேர் பணியாற்றுகின்றனர்.

அதானி குழுமம் ₹42,700 கோடி
அதானி குழுமம் தமிழ்நாட்டில் ₹42,700 கோடியில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய, உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்தது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த முதலீடுகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதில் ₹13,200 கோடி மதிப்பில் அதானி கனெக்ஸ் டேட்டா சென்டர், பசுமை ஆற்றல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் ₹24,500 கோடி, அம்புஜா சிமெண்ட்ஸ் சார்பில் ₹3,500 கோடி உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம் சுமார் 10,300 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஏபி மோலெர் மேர்ஸ்க்
ஏபி மோலெர் மேர்ஸ்க் நிறுவனம் உலகளாவிய சரக்கு போக்குவரத்து குறிப்பாக கன்டெய்னர் போக்குவரத்தில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து மையங்களை அமைக்கிறது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் ₹31,000 கோடி முதலீடு
சென்னையில் கடந்த ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன. அந்நாட்டு நிறுவனங்கள் மொத்தம் ₹31,000 கோடிக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கெம்ப்ளாஸ்ட் சன்மார் ₹1,007 கோடி
கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம் தமிழ்நாட்டில் அடுத்த நான்காண்டுகளில் ₹1,007 கோடியை முதலீடு செய்கிறது. இதில் முதற்கட்டமாக இந்த நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் ₹300 கோடி முதலீட்டில் சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தொடங்கியது.

கோத்ரெஜ் தொழிற்சாலை
சோப்பு, ஹேர் கலர்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள கோத்ரெஜ் நிறுவனம் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 400க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதாக அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

டேட்டா மையம்
புரூக்பீல்ட் , ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மற்றும் டிஜிட்டல் ரியாலிடி இணைந்து டிஜிட்டல் கனெக்ஷன் என்ற பெயரில் முத்தரப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இதன்படி சென்னையில் முதன் முதலாக 100 மெகாவாட் கையாளக்கூடிய டேட்டா மையம் அம்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடாக இது கருதப்படுகிறது.

பொம்மை தயாரிப்பு மையமாகும் ராணிப்பேட்டை
இந்தியாவின் முன்னணி பொம்மை தயாரிப்பு நிறுவனமான ஃபன்ஸ்கூல், ராணிப்பேட்டையில் உள்ள தனது ஆலையின் 2 அலகுகளையும் விரிவுபடுத்தி உள்ளது. இந்த பணிகள் முடிந்து, விரிவுபடுத்தப்பட்ட ஆலையில் நேற்று முதல் உற்பத்தி தொடங்கியது. இதன் மூலம் ராணிப்பேட்டை பொம்மை தயாரிப்பு மையமாக மாறி உள்ளது.

கேபிடல் லேண்ட் ₹4,500 கோடி
சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிடல் லேண்ட் நிறுவனம் ₹4,500 கோடி முதலீட்டில் சென்னை அம்பத்தூரில் டேட்டா சென்டர், ரெடியல் சாலையில் நெட் ஜீரோ ஐடி பார்க் மற்றும் ஒரகடத்தில் தொழில்துறை பூங்கா அமைக்க உள்ளது. இதுதவிர புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் சோலார் மின் உற்பத்தி மையமும் நிறுவ இருக்கிறது. மேலும், ஓசூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் தொழில் பூங்கா திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டள்ளது.

வேலியோ ₹1000 கோடி
பிரான்சை சேர்ந்த உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான வேலியோ, அடுத்த 5-6 ஆண்டுகளில் சென்னை மண்டலத்தில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய சுமார் ₹1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கோனே எலிவேட்டர்ஸ்
முன்னணி லிப்ட் நிறுவனமான கோனே எலிவேட்டர்ஸ் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில் உள்ள தனது ஆலையை விரிவுபடுத்தியது. இங்கு, நவீன எஸ்கலேட்டர்கள் தயாரிப்பு பணி கடந்த மாதம் முதல் தொடங்கி உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் எஸ்கலேட்டர்கள் இந்தியா தவிர இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பேட்டரி மறு சுழற்சி ஆலை ₹500 கோடி
கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரியில் மிகப்பெரிய பேட்டரி மறு சுழற்சி ஆலை அமைக்கப்பட உள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் பாண்டி ஆக்சைடு அண்ட் கெமிக்கல் நிறுவனம் பேட்டரி மறு சுழற்சி மற்றும் உற்பத்தி ஆலை யை ₹300 முதல் ₹500 கோடி முதலீட்டில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

₹500 கோடியில் திரைப்பட நகரம்
கடந்த 2023 – 24ம் ஆண்டுக்கான செய்தித் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லி அருகில் ₹ 500 கோடியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதனையடுத்து திரைப்பட நகரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலை அருகே குத்தம்பாக்கத்தில் 152 ஏக்கரில் அதி நவீன திரைப்பட நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மிட்சுபிஷி எலெக்ட்ரிக் ₹200 கோடி
மிட்சுபிஷி எலெக்ட்ரிக், குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதலீடு ரூ 200 கோடி. இதன் மூலம் 50 பேர் வேலை வாய்ப்பு பெறுவர்.

அடிடாஸ்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், ஆடை, காலணி உள்ளிட்டவற்றை தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் பவேரியாவில் உள்ளது. இந் நிறுவனம் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. சீனாவுக்கு வெளியே ஆசியாவில் அமையும் முதல் மையம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 500 முதல் 1000 பேர் பணியில் அமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

மெட் எக்ஸ்பர்ட்
மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கான பில்களை தயாரிக்கும் அமெரிககாவின் மெட் எக்ஸ்பர்ட் நிறுவனம் தனது உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஓலா எலெக்ட்ரிக்
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் வாகனங்களுக்கான ஜிகா ஆலையை அமைத்துள்ளது. இந்த ஆலை முழுமையாக செயல்பட துவங்கும்போது 25 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்

டெஸ்லா
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் டெஸ்லா கார் தொழிற்சாலையை அமைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாலுகால் பாய்ச்சலில் தமிழ்நாடு
தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்வதால்தான், தமிழ்நாட்டின் வளர்ச்சி நாலுகால் பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்பின்மை வெகுவாக குறைகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில் வளர்ச்சி, கல்வி, சுகாதார, மருத்துவ வசதிகளுக்கான உள்கட்டமைப்புகள் மேம்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, மாநிலங்களின் ஸ்டார்ட்அப் தர வரிசையில் முன்னணி இடம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட, புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசையில் தமிழ்நாடு அரசு இந்த சாதனையை படைத்துள்ளது. தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இந்த சாதனையை படைக்க வழி வகுத்திருக்கிறது. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் தமிழ்நாடு அரசின் முயற்சியால் இவை சாத்தியமாகியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு நிர்ணயித்த இலக்கிற்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பொருளாதார மாநிலமாக மாறும் என்பதில் ஐயமில்லை என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் வருகிறது போர்டு
சென்னை மறைமலை நகரில் போர்ட் இந்தியா நிறுவனம் கார் உற்பத்தி ஆலையை மூடிய பிறகு, அதனை விற்க முயற்சி செய்தது. ஆனால், தமிழ்நாடு அரசு இங்கு தொழில் வாய்ப்புகளை பெருக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில், விற்கும் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் இங்கு ஆலையை துவக்க போர்டு இந்தியா முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக்கார்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ போன் உற்பத்தியில் சாதனை
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ போன்களுக்கு தரத்தில் உயர்ந்தவை. இப்படிபட்ட ஐ போன்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூன்று இந்தியாவில் இயங்குகின்றன. அதில், 2 தமிழ்நாட்டில் இருக்கின்றன. பெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனமும், சென்னை அருகே மகிந்திரா சிட்டில் உள்ள பெகட்ரான் நிறுவனமும் ஐபோன்களை உற்பத்தி செய்கின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஐபோன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெகட்ரான் நிறுவனத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். இங்கு ஆண்டுக்கு 50 லட்சம் ஐபோன்கள் உற்பத்தி ஆகின்றன. இப்போது இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபோன் ஆலையை ஓசூரில் டாடா நிறுவனம் அமைத்து வருகிறது. ₹7 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் இந்த ஆலை மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

The post ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதும் மூன்றாண்டு ஆட்சியில் ஒளிரும் தமிழகம்: பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு; பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,EU ,Chief Minister ,K. ,Timuka ,Stalin ,
× RELATED முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட...