×

முதற்கட்ட மக்களவை தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.! நாளை மறுநாள் வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த அனல் பறந்த பிரசாரம் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலும், எடப்பாடி பழனிச்சாமி சேலத்திலும் பிரச்சாரத்தை முடித்தனர். நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. இந்தியாவின் 18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16ம் தேதி வெளியிட்டது. அதன்படி, 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 16ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. அதன்படி, நாளை மறுதினம் (19ம் தேதி) நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 அன்றும், 3ம் கட்டம் மே 7 அன்றும், 4ம் கட்டம் மே 13, 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 20 அன்றும், 6ம் கட்டம் மே 25 அன்றும், இறுதியாக 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 அன்றும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம், விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு 19ம் தேதி (நாளை மறுதினம்) தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இன்று மாலை 6 மணி வரை தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மாலை 6 மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க கூடாது, சமூகவலை தளங்களில் கூட பிரசாரம் செய்யக்கூடாது. தேர்தல் பணிக்காக வெளியூர் சென்றவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். கல்யாண மண்டபம், லாட்ஜுகளில் தங்கி இருக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் இன்று தனது பிரச்சாரத்தை முடித்தார். மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுதினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இந்த தேர்தலில் தமிழகத்தில் 6,23,33,925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

இவர்கள் அனைவரும் எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் அச்சமின்றி, பாதுகாப்பாக வந்து ஓட்டளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் 8,050 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த மையங்களில் கூடுதல் துணை ராணுவ வீரர்கள் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்றைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுதினம் (19ம் தேதி) வாக்களிக்கும் மக்கள், தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது ஜூன் 4ம் தேதியன்றுதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

The post முதற்கட்ட மக்களவை தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.! நாளை மறுநாள் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Puducherry ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Edappadi Palanichami ,Salem ,Dinakaran ,
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...