×

துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு

சென்னை : துபாயில் இரண்டு ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ள நிலையில், உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல என்று பூவுலகின் நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். பாலைவன தேசமான ஐக்கிய அரபு அமீரக நாட்டில் இயல்பாகவே வறண்ட வானிலை தான் காணப்படும்… ஆனால் வரலாற்றில் இல்லாத ஒன்றாக இடைவிடாமல் செய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் யுஏஇ மற்றும் ஓமனில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

துபாய் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அங்கு 120 மிமீ மழை ஒரே நேரத்தில் பெய்ததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர். பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலைகள் மூடப்பட்டன. துபாய் ஏர்போர்ட்டில் வெள்ளம் புகுந்ததால் விமான சேவை அடியோடு முடங்கியது. ஓமனில் 10 பள்ளி மாணவர்கள் உள்பட 18 பேர் மழைக்கு பலியாகி விட்டனர்.இதனை சுட்டிக் காட்டி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வெளியிட்ட பதிவில், “இரண்டு ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது துபாயில்.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்பதைப்போல காலநிலை மாற்றத்தை இனியும் ஒரு நாடோ / ஊரோ / குடும்பமோ / தனிநபரோ கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. அப்படி கடக்க முற்படுவது பெரும் பொருளாதார – உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும். உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல!” என்று கூறியுள்ளார். இதனிடையே கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறுமார்க்கமாக துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

The post துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்… உலகின் எந்த கனவு தேசமும் இதற்கு விதிவிலக்கல்ல : பூவுலகின் நண்பர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Dubai ,Earth ,CHENNAI ,United Arab Emirates ,
× RELATED குழந்தையின் பாலினத்தை சமூக...