×

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!!

வாஷிங்டன்: இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவித்துள்ளது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் உள்ள ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் விமானம் குண்டு வீசி தாக்கியதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதிகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் வகையில் நள்ளிரவில் ஈரான் 300க்கும் அதிகமான டிரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. அதில், 99 சதவீத டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

ஈரான் ஏவிய 300 டிரோன்களில் 80 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடங்கலாம் என இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தாக்குதல் குறித்து ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில் தங்களது எச்சரிக்கையை மீறியதற்காக ஈரான் மீது பொருளாதார தடையை அறிவித்திருக்கிறது அமெரிக்கா. பிரிட்டனும் அமெரிக்காவுடன் கைகோர்த்து பொருளாதார தடையை அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

 

The post இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை.. அமெரிக்கா, பிரிட்டன் அறிவிப்பால் அதிருப்தி!! appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,Washington ,US ,Britain ,Iranian ,Embassy ,Damascus, Iran ,United States ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டெடுப்பு!