×

வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: சிசிடிவி காமிரா கண்காணிப்பு திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான

திருவண்ணாமலை, ஏப்.17: திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், வாக்கு எண்ணும் மையங்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும், சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகளை நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளை (ஸ்ட்ராங் ரூம்) கலெக்டர் பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கண்காணிப்பும், காமிரா காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பார்வையிடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் சிசிடிவி காமிரா காட்சிகளை பார்வையிடவும் வசதி செய்யப்படுகிறது. வாக்கு எண்ணும் இரண்டு மையங்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில், 24 மணி நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கையை சட்டமன்ற தொகுதிவாரியாக மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ஒவ்வொரு மக்களவைத் தொகுதிகளிலும் தலா 6 அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் 15 மேசைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, ஆரணி தொகுதிக்கான தேர்தல் நடத்்தும் அலுவலர் டிஆர்ஓ பிரியதர்ஷினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மந்தாகினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் தியாகராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு: சிசிடிவி காமிரா கண்காணிப்பு திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளுக்கான appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Arani ,Collector ,Bhaskarapandian ,Arani Lok ,Sabha ,Lok Sabha elections ,Tamil Nadu ,Tiruvannamalai, ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே கம்பத்தில் கட்டி வைத்தனர்...