×

தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?.. அது ஜனநாயகத்துக்கு எதிரானது..ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து..!!

மதுரை: தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 1000 துப்புரவு பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் நிரந்தரமாக பணியமர்த்தப்படவில்லை. நிதி பற்றாக்குறை என காரணம் காட்டி நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

அதோடு மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பிடங்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. தூய்மை பணியும் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுகிறது. இதனால், தூய்மை பணியாளர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். கழிப்பிடம் நடத்தும் தனியார், அதிக லாபம் பெறுவதற்காக தூய்மை பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் பொருளாதார நெருக்கடி நிலையை ஏற்படுத்துகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

ஆகவே மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள தூய்மை பணி ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். தூய்மை பணியாற்றிவரும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை கொண்டு சுயஉதவி குழுக்களை உருவாக்கி, தூய்மை பணி ஒப்பந்தங்களையும், கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அது ஜனநாயகத்துக்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்தனர். மனுதாரர் தனது கோரிக்கையை திருத்தி மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?.. அது ஜனநாயகத்துக்கு எதிரானது..ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து..!! appeared first on Dinakaran.

Tags : ICOURT BRANCH ,Madurai ,High Court ,Selwakumar ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...