×

“வேங்கைவயல் சம்பவத்தில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும்”: ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி

சென்னை: வேங்கைவயல் சம்பவத்தில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை உறுதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில், ஒருநபர் ஆணையம் அமைத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அந்த ஒருநபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் மாநில அரசு தீவிரம் காட்டாத காரணத்தினால் கிராம மக்கள் வருகின்ற மக்களவை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது, 15 மாதங்களாகிவிட்டன, புலன் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? எப்போது விசாரணை முடிக்கப்படும்? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு சிபிசிஐடி காவல்துறை தரப்பில், உண்மை கண்டறியும் சோதனை, குரல் மாதிரி சோதனை என பல சோதனைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதுவரை 337 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வழக்கின் புலன் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என்றும் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்தி விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். அன்றைய தினம் புலன் விசாரணை முடிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

The post “வேங்கைவயல் சம்பவத்தில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும்”: ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி appeared first on Dinakaran.

Tags : VENKAIVIAL ,Chennai ,Chennai High Court ,Vengaiweal ,Pudukkottai District ,Vengkaiweal ,CBI ,iCourt ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...