×

தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும். 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு வருகிற 19ம் தேதி (வெள்ளி) தேர்தல் நடக்கிறது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிந்தது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 873 பேரும், பெண் வேட்பாளர்கள் 77 பேரும் களத்தில் உள்ளனர்.

வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென்சென்னையில் 41, மத்திய சென்னையில் 31, திருவள்ளூர் 14, காஞ்சிபுரம் 11, பெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் போட்டியிடுகிறார்கள். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் ஆண்கள், பெண்கள் 4 பேர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 19ம் தேதி (வெள்ளி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ம் தேதி அன்று அருணாச்சலபிரதேசம் – 2, அசாம் – 5, பீகார் – 4, சட்டீஸ்கர் – 1, மத்தியபிரதேசம் – 6, மகாராஷ்டிரா – 5, மணிப்பூர் – 2, மேகாலயா – 2, மிசோரம் -1, நாகாலாந்து – 1, ராஜஸ்தான் – 12, சிக்கிம் – 1, திரிபுரா – 1, உத்தரபிரதேசம் – 8, உத்தரகாண்ட் – 5, மேற்குவங்கம் – 3, அந்தமான் நிக்கோபர் தீவுகள் – 1, ஜம்மு காஷ்மீர் – 1, லட்சத்தீவு – 1, தமிழகம், புதுச்சேரி என 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பிரசாரம் தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அதாவது நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்படி இன்னும் ஒரு நாள் மட்டுமே அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யலாம். பின்னர் 17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கள் வெளியேற இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற 19ம் தேதி 39 தொகுதிகளில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,59,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88,783 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவுக்கு தேவையான எண்ணிக்கையைவிட 20 சதவீதம் அதிகம். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஒட்டும் பணிகள் நிறைவடைந்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

18ம் தேதி (நாளை மறுதினம்) மாலைக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழு போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குப்பதிவு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் நாளை மறுதினம் மாலைக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் கையெழுத்து போட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுக் கொள்வார்கள். எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்பாக வந்து ஓட்டளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக 4,169 புகார்கள் சி-விஜில் அப் மூலம் இதுவரை வந்துள்ளது. இதில் 3,350 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 383 புகார்கள் தவறானவை. 39 புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வீடு வீடாக சென்று இதுவரை 92.80 சதவீதம் பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. சிலர் வீடுகளில் இல்லாததால் கொடுக்க முடியவில்லை. அதுவும் இன்றைக்குள் கொடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்றைக்குள் தபால் வாக்களிக்க வேண்டும்.

தமிழகத்தில் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் பிரசாரம் செய்யவோ, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலோ ஈடுபட அனுமதி இல்லை. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் அங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த பணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

நயினார், அண்ணாமலை மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?
தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ₹4 கோடி பணம் தொடர்பாக திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான நேரடி விசாரணை பற்றிய தகவல் எனக்கு வரவில்லை. தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி, போலீஸ் பார்வையாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை அறிக்கைகள் அனைத்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்கள். வேட்பாளர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த இறுதி முடிவை தேர்தல் ஆணையம்தான் எடுக்கும். அதேபோன்று கோவையில் இரவு 10 மணிக்கு மேல் பாஜ வேட்பாளர் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தது பற்றி தகவல் எனக்கு இன்னும் வரவில்லை. கோவை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீசார் இதுபற்றி முடிவு செய்வார்கள்.

தேர்தல் நாள் அன்று (19ம் தேதி) பொது விடுமுறை. ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக விடுமுறை அறிவிக்காவிட்டால் அந்தந்த மாவட்ட எஸ்டிடி கோட் சேர்த்து 1950 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குப்பதிவு மையத்திற்குள் அழைத்து வர கூடுதல் நபர் ஒருவருக்கு ஓட்டுச்சாவடி அலுவலர் அனுமதி அளிப்பார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

The post தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற உத்தரவு நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது: 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Chief Election ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...