×

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை கலெக்டர் தகவல் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை ஏப். 16: வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. அதில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 72 மணி நேரம் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து கலெக்டர் விளக்கினார். மேலும் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. எனவே, அதன் பிறகு வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வாக்குப்பதிவு மையங்களுக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் தவிர்த்து, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. எனவே, செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை வாக்குச்சாவடிகளுக்குள் கொண்டு செல்ல கூடாது என்றார்.

மேலும், வாக்குச்சாவடி மையத்திற்குள் அல்லது வாக்குச்சாவடி மையத்துக்கு அருகில் எவ்வித சட்ட விரோத நடவடிக்கைகளிலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை அவர்களுடைய இல்லங்களில் இருந்து வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வரக்கூடாது என கலெக்டர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில், செய்யார் உதவி கலெக்டர் பல்லவி வர்மா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், தாசில்தார் சாப்ஜான்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை கலெக்டர் தகவல் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,Thiruvannamalai Collector ,Dinakaran ,
× RELATED ‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான...