×

புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம் உள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அதிகாரி தகவல்

புழல்: புழல் ஏரியில் அதிகளவு நீர் இருப்பு காரணமாக கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த வருடம் கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்று புழல் ஏரி. இதன் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நேற்றைய நிலவரப்படி 2808 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிலிருந்து வினாடிக்கு 215 கன அடி வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 214 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு இதே தேதியில் 2401 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோடை காலத்திலும், இந்த ஆண்டு அதிக அளவில் இருப்பில் உள்ள தண்ணீர் கடல்போல் காட்சியளிக்கிறது. எனவே இந்தாண்டு குடிநீர் பிரச்னை வராது என நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘புழல் ஏரியில் கோடை காலத்தில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. இதனை புழல், செங்குன்றம், மாதவரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பகுதி மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் இதில் ஒரு சிலர் கோடை வெயில் வெப்பத்தை தணிக்க ஏரியில் இறங்கி குளிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரு சில நேரங்களில் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், செங்குன்றம், புழல், அம்பத்தூர், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புழல் ஏரிக்கரை தொடங்கும் கண்ணப்ப சாமி நகர் முதல் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆலமரப் பகுதி, அன்னை இந்திரா நகர், பம்மது குளம், லட்சுமிபுரம், சரத்து கண்டிகை, எரான் குப்பம், பொத்தூர், உப்பரபாளையம், திருமுல்லைவாயல், ஒரகடம், கள்ளிகுப்பம், பானு நகர், முருகாம்பேடு, சண்முகபுரம், சூரப்பட்டு, மேட்டூர் வரை உள்ள ஏரிக்கரை ஓரங்களில் போலீசார் ரோந்து பணியில் சென்று வந்தால் யாரும் குளிக்க வரமாட்டார்கள்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம் உள்ளதால் சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal Lake ,Puzhal ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...