×

மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் கட்டிய கயிறு கழுத்தில் சிக்கி வாலிபர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ரோட்டில் கட்டப்பட்டு இருந்த கயிறு கழுத்தில் சிக்கி பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக இறந்தார். கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு கொச்சி வந்தார். இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. சாலைகளில் போலீசார் கயிறு கட்டி வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் கொச்சி வடுதலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் உண்ணி என்ற வாலிபர் பைக்கில் எம்ஜி ரோடு வழியாக சென்று கொண்டு இருந்தார். அந்த ரோட்டிலும் போலீசார் கயிறு கட்டி இருந்தனர். அதை கவனிக்காமல் சென்றதால் மனோஜ் உண்ணியின் கழுத்தில் கயிறு சிக்கியது. இதில் அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

பலத்த காயமடைந்த அவரை போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனோஜ் உண்ணி பரிதாபமாக இறந்தார். வாலிபர் பைக்கில் அந்த வழியாக வந்தபோது கயிறு கட்டி இருப்பதால் செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும், ஆனால் வண்டியை நிறுத்தாமல் சென்றது தான் விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

The post மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்காக போலீசார் கட்டிய கயிறு கழுத்தில் சிக்கி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Modi ,Thiruvananthapuram ,Kerala ,Kochi ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...