×

விருதுநகர் அருகே சென்னல்குடியில் பழமையான சிவன் கோயில் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

விருதுநகர், ஏப். 14: விருதுநகர் அருகே சென்னல்குடியில் பழமையான சிவன் கோயில் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் அருகே சென்னல்குடி கிராமத்தில் பழமையான சிற்பங்கள் காணப்படுவதாக கல்லூரி மாணவர்கள் ராஜபாண்டி, ஈஸ்வரபாண்டி, அஜய் முருகன் உள்ளிட்டோர் பாண்டிய நாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ஆய்வாளர் தர், உதவிபேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சென்று கள ஆய்வு மேற்கொண்டு கூறுகையில், சென்னல்குடி கிராமம் வரலாற்று பின்னணி உடையது என்பதற்கான தடயங்கள் ஏராளமாக கிடைத்து வருகிறது. அவற்றில் ஒரு சிதைந்த சிவன் கோவில், செக்கு கல்வெட்டு, விநாயகர் சிற்பம், சிவலிங்கம் உள்ளிட்டவை.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், சென்னல்குடி வரலாற்றை பின்னோக்கி கொண்டு செல்லும் வகையில் தற்போது ஒரு சதுர வடிவ ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், நந்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட கற்சிற்பங்கள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன. இதன் அருகில் பெரும் பாறைகளும் மண்ணில் புதைந்து காணப்படுகின்றன. இதில் சிவலிங்கம் 3 அடி உயரத்துடன் சதுர வடிவ ஆவுடையுடன் காணப்படுகிறது.

அடிப்பாகம் பத்ம வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர் எதிரே நந்தி சிற்பம் காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கு வலது பக்கம் ஒரு விநாயகர் சிற்பம் நான்கு கரத்துடனும் மழு, பாசம் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மூன்றடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. விநாயர் சிற்பத்திற்கு அருகில் சண்டிகேஸ்வரர் சிற்பமும், சுகாசன கோலத்தில் காணப்படுகிறார். வலது கையில் மழுவுடனும், இடது கையை தொடையில் வைத்தபடி அமர்ந்த நிலையில் நேர்த்தியாக வடிக்கப் பட்டுள்ளது.

இச்சிற்பங்கள் தற்போதும் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த சிற்பங்களுக்கு 300 அடி தொலைவில் ஒரு சூலக்கல் காணப் படுகிறது. இவற்றை பார்க்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும். அதற்கான நிலம் தானமாக வழங்கி இருக்க வேண்டும். இவ்வூரின் வரலாற்று பெயர் சோனாட்டு முல்லை சூடினான்  ராஜமாணிக்க நல்லூர். இந்த பெயரானது முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியரின் கல்வெட்டில் காணப்படுகிறது. இந்த கல்வெட்டு அருகில் இடிந்த நிலையில் உள்ள சிவன் கோயிலில் காணப்படுவதாக தெரிவித்தனர்.

The post விருதுநகர் அருகே சென்னல்குடியில் பழமையான சிவன் கோயில் சிற்பங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennalgudi ,Virudhunagar ,Rajapandi ,Iswarapandi ,Ajay Murugan ,Pandya Nadu Cultural Center ,Chennalkudi ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...