×

இன்று அம்பேத்கர் பிறந்த நாள்; தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை, ‘சமத்துவ நாள்’ என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி:
அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அம்பேத்கருக்கு உண்டு. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமை கொடுமையை எதிர்த்து கடுமையாக போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தை தழுவியவர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர். ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதி புரட்சியாளர் என பன்முகத்திறன்களை பெற்றவர். இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் வரைவு குழு தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்டமேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

அம்பேத்கர் புகழை போற்றும் வகையில் வியாசர்பாடி அரசு கலைக்கல்லூரிக்கு அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கரை போற்றியுள்ளது திமுக அரசு.

சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாள சின்னமாக விளங்கிய அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் நாளை (இன்று) ‘சமத்துவ நாள்’ என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம். அம்பேத்கரை போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இன்று அம்பேத்கர் பிறந்த நாள்; தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Tamil Nadu ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,K. ,Stalin ,K. Stalin ,Dinakaran ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...