×

வேலையும் போச்சு.. வண்டியும் போச்சு.. புகாரளித்தும் பெற மறுக்கும் போலீசார்: கால்சென்டர் வாலிபர் புலம்பல்

பாலக்காடு: கால்சென்டரில் பணிபுரியும் வாலிபரின், டூவீலர் திருடு போனது. இது குறித்து புகாரளித்தும் போலீசார் புகாரை பெறவில்லை. இந்நிலையில் அவர், வேலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அபிஜித், (வயது22). இவர் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள கால்சென்டர் ஒன்றில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார். அந்நிறுவனத்தில் பணிபுரியும், 30க்கும் மேற்பட்டோருக்கு, சேலம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி ஜக்கப்பன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்ண்ட்மென்டில் தங்குவதற்கும் அந்நிறுவனமே ஏற்பாடு செய்துள்ளது.

அபிஜித், தனக்கு வரும் வருமானத்தை காண்பித்து, வங்கியில் கடந்த, 2023 ஜூலையில் யமஹகா, ஆர்.15 பைக் வாங்கியுள்ளார். கடந்த, 3ம் தேதி பணி முடிந்து தான் தங்கியுள்ள அபார்ட்மெண்ட் கீழ்தளத்தில் பைக்கை நிறுத்தி சென்றுள்ளார். மறுநாள் காலை வந்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து அப்பார்ட்மண்ட் மற்றும் அருகிலுள்ள ‘சிசிடிவி’ காட்சிகளை அபிஜித் பார்த்துள்ளார். அப்போது அப்பார்ட்மெண்டிலிருந்து பைக்கை ஒரு நபர் எடுப்பதும், அந்த சாலை வழியே மூன்று பேர் பைக்கை திருடி சென்றதும் தெரிந்தது. இந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் அன்றைய தினமே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், அபிஜித்தை அவர் பணிபுரியும் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. அவர் தங்கியிருந்த அபார்ட்மண்டையும் காலி செய்யுமாறு கூறியுள்ளது. இது குறித்து அபிஜித் கூறியதாவது: நான் என் வேலையை நம்பி கடந்தாண்டு பைக் வாங்கினேன். இன்னும், 2 வருட தவணை மீதம் உள்ளது. இந்நிலையில் என் பைக்கை, மூன்று நபர்கள் திருடியுள்ளனர். ‘சிசிடிவி’ ஆதாரங்களுடன் புகாரளித்தும் போலீசார், புகாரை வாங்க மறுக்கின்றனர். ‘பைக்கை நன்றாக தேடி பார்த்துட்டு வாங்க’ என்கின்றனர். ‘தேர்தல் நேரத்தில் துணியை காணும், பைக்கை காணும்னு வரீறிங்க’ எனவும் திட்டுகின்றனர்.

ஆதாரத்தோடு புகாரளித்தும் போலீசார் புகார் வாங்க மறுக்கின்றனர். நீங்கள் போலீஸ் ஸ்டேஷனிலேயே பணிபுரியுங்கள் எனக்கூறி வேலையிலிருந்தும் என் நிறுவனம், என்னை நீக்கியுள்ளது. தங்கும் இடத்தையும் காலி செய்ய சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் திருடு போனால் போலீஸ் நடவடிக்கை எடுக்காதா, ஆதாரங்களை வழங்கியும் அலைக்கழித்து, புகார் மனுவை பெற்று ரசீது கூட வழங்கவில்லை. இது குறித்து மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post வேலையும் போச்சு.. வண்டியும் போச்சு.. புகாரளித்தும் பெற மறுக்கும் போலீசார்: கால்சென்டர் வாலிபர் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Abhijith ,Palakkad, Kerala ,Krishnagiri, Rayakottai ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...