×

பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது; நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 13 வகை அடையாள ஆவணங்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்

சேலம்: நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 13 வகையான அடையாள ஆவணங்களை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பூத் சிலிப் மட்டும் இருந்தால் வாக்களிக்க முடியாது என எச்சரித்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவிற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதேபோல், வாக்காளர்களின் பெயர், முகவரி, வாக்காளர் அட்டை எண், வரிசை எண், பாகம் எண் மற்றும் வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, தேர்தலில் வாக்களிக்க தேவையான 13 வகையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வாக்களிப்பதற்கான அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை, வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்குப் புத்தகங்கள், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் பணியாளர் அடையாள அட்டை, வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, இந்திய கடவுச் சீட்டு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

மேலும், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, நாடாளுமன்ற, சட்டமன்றப் பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள், இயலாமைக்கான தனித்துவமான அட்டை என இவற்றுள் ஏதேனும் ஒரு ஆவணத்தை வாக்காளர்களுக்கான அடையாளச் சான்றாகக் கொண்டு வாக்களிக்கலாம். அதேசமயம் தற்போது வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வரும் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். எந்தவித அடையாள அட்டையும் இன்றி, பூத் சிலிப்பை மட்டும் அடையாளச் சான்றாக பயன்படுத்தி வாக்களிக்க இயலாது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பூத் சிலிப் மட்டும் இருந்தால் போதாது; நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க 13 வகை அடையாள ஆவணங்களை அறிவித்தது தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Tags : Booth Chile ,Electoral Commission ,BOOTH ,CHILE ,Tamil Nadu ,Booth Chilip ,Election Commission ,Dinakaran ,
× RELATED சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பேச...