×
Saravana Stores

தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிடுவதற்காக வழக்கறிஞர் பிரகாசம் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சாதிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தனர். இதையடுத்து, வேட்புமனுவுடன் செலுத்திய டெபாசிட் தொகை 12 ஆயிரத்து 500 ரூபாயை திருப்பித் தருமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி வழக்கறிஞர் பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்பு மனுவுடன் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பத் தரக் கோரி மனுதாரர் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விண்ணப்பம் அளிப்பதாக மனுதாரர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் விண்ணப்பம் மீது இரு வாரங்களில் தேர்தல் ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,iCourt ,Chennai ,Prakasam ,Madurai ,Lok ,Sabha ,Election Commission ,Dinakaran ,
× RELATED அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல்ஆணையம் ஆலோசனை..!!