×

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஏகனாபுரம் மக்களிடம் சமரச பேச்சு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கலெக்டர், தேர்தல் பார்வையாளர், எஸ்பி திரும்பி சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும் எனக்கூறி பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் சுற்று வட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக ஏகனாபுரம் மக்களும், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரும் அறிவித்திருந்தனர். 100% வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், கிராம மக்களின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் காஞ்சிபுரம் கலெக்டருமான கலைச்செல்வி மோகன், பெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தல் பொதுபார்வையாளர் அபிஷேக் சந்திரா, போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் நேற்று சம்பவ இடதுக்கு வந்தனர்.

தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா, ஏகனாபுரம் கிராம மக்களின் கோரிக்கை மனுவை தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய, மாநில அரசுக்கும் அனுப்பிவைக்கிறேன். ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிக்காமல் யாரும் இருக்கக்கூடாது என கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத ஏகனாபுரம் கிராம மக்கள், ”நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதால் எங்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை” என்று கூறினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேர்தல் பார்வையாளர், கலெக்டர், எஸ்பி திரும்பி சென்றனர்.

The post பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஏகனாபுரம் மக்களிடம் சமரச பேச்சு appeared first on Dinakaran.

Tags : Paranthur Airport ,Ekanapuram ,Kanchipuram ,Election Observer ,SP ,Parantur airport ,Kanchipuram District ,Paranthur… ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...