×

மசாலாக்களின் மறுபக்கம்…

நன்றி குங்குமம் டாக்டர்

மகிமை மிக்க மஞ்சள்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

‘ஏழைகளின் குங்குமப் பூ’ என்றழைக்கப்படும் மஞ்சள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மங்கலப் பொருளாகவும், மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தெற்கு ஆசியாவில், குறிப்பாக ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் உணவிலுள்ள விஷத்தை முறிக்கும் அற்புத மருந்தாகவே மஞ்சள் மருத்துவ உலகிற்கு அறிமுகமாகியுள்ளது என்று சமஸ்கிருத மருத்துவ நூல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தாவரங்களின் வேர்ப்பகுதியின் அடியிலோ அல்லது பக்கவாட்டிலோ உருவாகும் தண்டுப்பகுதி, வேர்த்தண்டுக்கிழங்கு என்றழைக்கப்படுகிறது. இந்த வேர்த்தண்டுக்கிழங்கின் மஞ்சள் நிறத்திற்குக் காரணம் அதிலிருக்கும் ‘குர்குமின்’ என்ற நிறமி. இந்த குர்குமினை உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் மருந்து நிறுவனமும் ‘உணவுச் சேர்க்கை’ களுள் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

மஞ்சளில், முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் (அ) கறிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், கப்பு மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் இருந்தாலும், சமையலுக்கு கறி மஞ்சள் என்னும் விரலி மஞ்சளும், முகம் மற்றும் தோல் வனப்பு, ஆரோக்கியத்திற்குக் கஸ்தூரி மஞ்சள் மற்றும் முட்டா மஞ்சளும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சள் கிழங்கு வகையில் வருவதால், 60 – 70 சதவிகிதம் வரை பிரதானமாக இருப்பது கார்போஹைடிரேட் சத்துதான். இதனுடன் 6 – 13 சதவிகிதம் தண்ணீர், 8% புரதம், 7% தாதுக்கள் மற்றும் 7 % நார்ச்சத்து, 0.2 கிராம் கால்சியம், 2500 மி.கி பொட்டாசியம், 47.5 மி.கி இரும்புச்சத்து, 50 மி.கி வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை தவிர, மஞ்சளின் மருத்துவ குணத்திற்கு அடிப்படையாக இருப்பது அதிலிருக்கும் டைஅரைல்ஹெப்படனாய்ட்ஸ், டைமீத்தாக்ஸிகுர்குமின் போன்ற பைட்டோகெமிக்கல்ஸ் என்னும் நுண்பொருட்களே.

ஜப்பானின் குமாமோட்டோ பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், மஞ்சளில் இருக்கும் ‘டர்மெரான்’ என்ற பொருள், பார்க்கின்சன் என்னும் நடுக்குவாத நோய்ப் பாதிப்பில் ஏற்படும் நரம்புத்திசுக்களைப் பாதுகாக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்தக் கொழுப்பைக் குறைத்துக் கட்டுக்குள் வைப்பதற்கும், நீரிழிவு நோயாளிகளின் உள்ளுறுப்புகளில் நச்சுப்பொருட்கள் சேர்ந்து பாதிப்பை உண்டுபண்ணாமல் இருப்பதற்கும், முடக்குவாத நோய்களுக்குக் காரணமான அழற்சிப் பொருட்களைக் குறைப்பதற்கும், வயிறு, குடல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதற்கும் மஞ்சள் பயன்படுகிறது.

மஞ்சளுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெளிப்பூச்சாகப் பயன்படுத்துவதும் மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. மஞ்சள் பொடியுடன் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தல் பல், ஈறுகள் மற்றும் தொண்டையில் ஏற்படும் கிருமித்தொற்றைத் தடுக்கிறது. தோல் நோய்கள், தீப்புண்களில் ஏற்படும் கிருமித்தொற்று, கை, கால்களிலுள்ள ரோமங்களின் வேர்க்கால்களில் ஏற்படும் கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் ஸ்டபைலோகாக்கஸ் ஏரியஸ் என்னும் பாக்டீரியாவை அழிக்கும் மிகச்சிறந்த அருமருந்தாக மஞ்சள் பயன்படுகிறது.

இத்தகைய மகத்தான மருத்துவகுணமிக்க மஞ்சளும் கலப்படத்திற்கு விதிவிலக்கல்ல. வேறு தாவரங்களின் வேர்ப்பகுதி, தண்டுப்பகுதி அல்லது வேர்த்தண்டுக்கிழங்குப் பகுதிகூட செயற்கை மஞ்சள் சாயத்தில் ஊறவைத்து, காயவைக்கப்பட்டு மஞ்சளுடன் கலப்படம் செய்யப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், அரைத்த மஞ்சள் தூளுடன், உற்பத்தி செய்யப்பட்ட தரமற்ற மஞ்சள் கிழங்குகள், பக்குவப்படுத்தப்பட்ட கிழங்குகள், மொத்த விற்பனை என்று பல நிலைகளில், மஞ்சளுடன் லெட் குரோமேட் என்னும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இவ்வாறாகக் கலப்படம் செய்யப்படும் ஈயம் மஞ்சள் பொடியாக உணவு மூலம் உடலுக்குச்சென்று பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது என்பதால், தரமான மஞ்சளைப் பார்த்து வாங்குவது அவசியம்.

சாம்பார், குழம்பு, ரசம் பிற உணவுப் பொருட்கள் என்று மஞ்சளை தினசரி உணவில் உபயோகப்படுத்தினாலும், அதற்கும் வரைமுறை இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம். ஒருநாளைக்கு உணவில் சேர்த்துக்கொள்ளும் மஞ்சள் அல்லது மருந்தாக எடுத்துக்கொள்ளும் மஞ்சளின் அளவு 0.5 கிராமிலிருந்து 2000 மி.கிராமுக்கு அதிகமாகாமல் இருப்பது நல்லது. அதுவும், மஞ்சளில் இருக்கும் குர்குமின் பொருளின் அளவைப் பொருத்தது என்பதால், 8 கிராமுக்கு அதிகமாக குர்குமின் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.

ஒருவேளை, உடலுக்குள் செல்லும் மஞ்சளின் அளவு அதிகமானால், குமட்டல், வயிற்றெரிச்சல், இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தல், வாந்தி போன்றவை ஏற்படலாம். உணவில் அதிக மஞ்சள் இருந்தால், கல்லீரல் மற்றும் பித்தப்பை சுரப்பை பாதித்து, மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் என்ற ஒரு கருத்து இருந்தாலும், அதற்கான உறுதியான ஆய்வுகள் இல்லை. என்றாலும், கல்லீரல், பித்தப்பை, கணைய நோய்கள் இருப்பவர்கள், மஞ்சள் உள்ளடங்கிய மருந்துப்பொருட்கள் உபயோகப்படுத்தும்போது மருத்துவரின் வழிகாட்டு
தலைப் பின்பற்றுவதுதான் நல்லது.

வெந்தயம்

தென்னிந்தியாவில் பெரும்பான்மையான உணவுகளில் பயன்படுத்தப்படும் வெந்தயம், உணவுப்பொருளாக மட்டுமல்லாமல், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. Trigonella foenum graecum என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெந்தயம், பேபேசியே என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது. வெறும் 60 செ.மீ உயரம் மட்டுமே வளரக்கூடிய இந்த புதர்வகைத் தாவரத்தின் உலர வைத்த விதைகளே வெந்தயமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டும்தான் விளையும் என்றில்லாமல், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. என்றாலும், வடஅமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது என்பதே உண்மை. பண்டைய ரோமானியர்கள், அவர்கள் அருந்தும் மதுவில் வெந்தயத்தைச் சேர்த்து, அதன் வாசனையை அதிகரித்துள்ளனர்.

பழங்காலத்தில் இருந்தே கைவைத்தியமாகவும், சித்த மருத்துவமுறையிலும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வெந்தயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகு போதுமான அளவில் தாய்ப்பால் சுரப்பதற்கும், மாதவிடாயின்போது ஏற்படும் அடிவயிற்றுவலியைக் குறைப்பதற்கும், தலைமுடி உதிர்தலைத் தடுத்து அடர்த்தியான முடி வளர்ச்சிக்கும் வெந்தயம் பயன்படுகிறது. கவுட் என்னும் கீல்வாத நோய், விரல் இடுக்குகளில் நீர்வடியும் கொப்புளங்களைக் கொண்ட எக்சீமா என்னும் தோல்நோய்க்கும், உடலில் நோய்கள் ஏற்படும்போது உருவாகும் நச்சுத்தன்மையைப் போக்குவதற்கும் வெந்தயம் பயன்படுகிறது.

நூறு கிராம் வெந்தயத்தில், தோராயமாக 58 % கார்போஹைட்ரேட், 6 % கொழுப்பு, 40 % கால்சியம், 23 % புரதம் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும், மாங்கனீஸ் சத்தும் உள்ளன. வெந்தயத்திலுள்ள பெரும்பான்மையான அமினோ அமிலங்கள், சோயாபுரதத்திற்கு இணையாக தரமுள்ள புரதமாகக் கருதப்படுவதால், மசாலா மற்றும் வாசனைப் பொருட்களில், அதிகப் புரதம் உடைய உணவுப்பொருளாகப் பார்க்கப்படுகிறது.

வெந்தயத்தில் இருக்கும் டேனின், பெக்டின் மற்றும் மியூசிலேஜ் எனப்படும் கொழகொழப்புத் தன்மை கொடுக்கும் பொருட்கள், அதிலிருக்கும் நார்ச்சத்துடன் சேர்ந்து, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், மலச்சிக்கலையும் போக்குகின்றன. கேலிக் அமிலம், புரோட்டோகேட்டகுயிக் அமிலம், கேட்கின், ஜென்டிசிக் அமிலம், வெண்ணிலிக் அமிலம், சிரின்ஜிக் அமிலம் போன்ற பைட்டோகெமிக்கல்ஸ் என்னும் நுண்சத்துக்களும் உள்ளன. வெந்தயத்திலிருக்கும் சொடோலன் என்னும் பொருள்தான், அதன் உலோகத்தன்மையுடன் கூடிய கசப்புத்தன்மைக்குக் காரணம். வெந்தயத்தில் இருக்கும் டிரைகோனலின் மற்றும் டையோஸ்ஜெனின் போன்ற நுண்பொருட்கள், அதன் நோய் நீக்கும் தன்மைக்கும், தோலுக்கு மென்மை கொடுப்பதற்கும் காரணமாக இருக்கின்றன.

வெந்தயத்தைப் பொடியாக உபயோகித்தால், ஒருநாளைக்கு 5 – 10 கிராம் மட்டுமே எடுத்துக்கொள்ளலாம். தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கும்போது, 1.2 கிராம் போதுமானது. அதிக அளவில் சாப்பிடும்போது, வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிறு உப்புசம் போன்றவை ஏற்படுவதுடன், தலைவலியுடன் கூடிய மயக்கநிலையும் ஏற்படலாம். இயற்கையிலேயே வெந்தயத்திற்கு ரத்த அழுத்தத்தையும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பதால், அந்நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் நல்லது. இல்லையென்றால், சட்டென்று ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைந்து, உடலுக்கு ஆபத்தான நிலையையும் ஏற்படுத்திவிடலாம். மேலும், பல்வேறு அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால், மீன், பருப்பு, பால் போன்ற புரத உணவுகளுடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் உடல்நிலை உள்ளவர்களுக்கு, வெந்தயமும் ஒவ்வாமை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

 

The post மசாலாக்களின் மறுபக்கம்… appeared first on Dinakaran.

Tags : Dr. ,Magnificent ,Vantarkuzali ,South Asia ,Unani… ,
× RELATED நரம்பு வலியிலிருந்து விடுதலை..!