×

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் மக்களவை தொகுதி: – ஒரு பார்வை

வேலூர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ‘வேலூர் சிப்பாய் புரட்சி’. இந்தியாவின் முதல் சுதந்திர போர் கடந்த 1806 ஜூலை 10 நாள் வேலூரில் நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்த புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை. இருப்பினும், இந்த போரின் நினைவாக இன்றளவும் வேலூர் கோட்டை கம்பீரமாக தன்னுடைய வீரவரலாறை சொல்லும் சான்றாக நிலைத்து நிற்கிறது. பொதுத்தொகுதியில் ஒன்றான வேலூர், நாடாளுமன்ற தொகுதியில் 8வது தொகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் முதல் தேர்தல் 1951ல் நடந்தது. தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு(தனி), அணைக்கட்டு, வேலூர் மற்றும் ஆரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பிற்கு பின் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வேலூர் நாடாளுமன்றத்தில் இணைக்கப்பட்டன. இந்த தொகுதியில் முதலியார், வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகளவில் இருக்கின்றனர். அதேபோல், வியாபாரிகள் அதிகம் உள்ள தொகுதியாகும்.

விவசாயத்தை பிரதானமாக கொண்டிருந்தாலும் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள், குடியாத்தத்தில் கைலி, பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. படித்தவர்கள் நிறைந்த தொகுதியாக இருந்தாலும் கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கும் – கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் தண்ணீர் பிரச்னைக்கு காரணமான பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியானாலும், வேலூர் மாவட்டத்தில் தான் அதிக தூரம் ஓடுகிறது. பாலாற்றில் வெள்ளம் வரும் போது நேராக கடலில் சென்று கலப்பதால் தண்ணீரை சேமிக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதே நீண்ட கால கோரிக்கையாக இப்பகுதி மக்கள் முன் வைக்கின்றனர்.

அதேபோல், பேரணாம்பட்டு பகுதியில் கடந்த 2005ல் பத்தலப்பல்லி அணை ரூ.38.50 கோடியில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த அணையை கட்டிமுடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை. இதுதவிர, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளதால், மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் வழங்க வேண்டும், கே.வி.குப்பத்தில் அடிப்படை கட்டமைப்புகள் வலுப்படுத்துதல், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், வாணியம்பாடியில் நியு டவுன் ரயில்வே மேம்பாலம், மல்லகுண்டா பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் அரசு நிலத்தில் சிப்காட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மக்களிடையே இன்றளவும் முன்வைக்கப்படுகின்றன.

அதேபோல், தோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தோல் தொழில் மண்டலம், தோல் தொழில் பூங்கா, தோல் ஆராயச்சி நிலைய கிளை, தோல் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை அமைக்க வேண்டும் என்பன நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன. இந்த தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிகப்படியாக வெற்றி வாகை சூடியதால் இங்கு அக்கட்சியின் கையே ஓங்கி நிற்கிறது. அதன்படி, தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் இரண்டாவது முறையாக கதிர் ஆனந்த் களம் காண்கிறார். அதேபோல் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகமும், அதிமுக சார்பில் பசுபதியும் போட்டியிடுகின்றனர்.

இதுதவிர, நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த், சுயேச்சையாக நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இதில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தேர்தலுக்கு முன்பாகவே மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம் உள்ளிட்டவைகளை நடத்தினார். அதேபோல், வேலூரில் ரூ.1 கோடியில் இலவச திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். மக்களிடையே தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்காக செய்த நலத்திட்டங்கள் மற்றும் திமுக அரசின் சாதனைகளை முன்வைத்து வாக்காளர்களிடையே பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். எனவே, வேலூர் தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பை இந்த தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் 7,31,831
பெண்கள் 7,77,922
மூன்றாம் பாலினத்தவர் 211
மொத்தம் 15,09,964

2019ம் ஆண்டு தேர்தல் நிலவரம்
வேட்பாளர் கட்சி வாக்குகள் சதவீதம்
கதிர் ஆனந்த் திமுக 4,85,340 47.21%
ஏ.சி.சண்முகம் அதிமுக 4,77,199 46.42%
தீபலட்சுமி நா.த.க 26,955 2.63%
நோட்டா 9,411 0.92%

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
தொகுதிகள் உறுப்பினர்கள்
வேலூர் கார்த்திகேயன் (திமுக)
அணைக்கட்டு நந்தகுமார் (திமுக)
கே.வி.குப்பம்(தனி) ஜெகன்மூர்த்தி (அதிமுக)
குடியாத்தம்(தனி) அமுலு (திமுக)
வாணியம்பாடி செந்தில்குமார் (அதிமுக)
ஆம்பூர் விஸ்வநாதன் (திமுக)

தொகுதியின்
வெற்றி விவரம்
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி
1951 ராமசந்தர்&
முத்துகிருஷ்ணன் காமன்வீல் கட்சி மற்றும் காங்கிரஸ்
1957 முத்துகிருஷ்ணன்&
முனியசாமி காங்கிரஸ்
1962 அப்துல் வாகித் காங்கிரஸ்
1967 குசேலர் திமுக
1971 உலகநம்பி திமுக
1977 தண்டாயுதபாணி நிறுவன காங்.
1980 அப்துல் சமத் சுயேச்சை
1984 ஏ.சி.சண்முகம் அதிமுக
1989 அப்துல் சமத் காங்கிரஸ்
1991 அக்பர் பாஷா காங்கிரஸ்
1996 பி.சண்முகம் திமுக
1998 என்.டி.சண்முகம் பாமக
1999 என்.டி.சண்முகம் பாமக
2004 காதர் மொகிதீன் திமுக
2009 அப்துல் ரஹ்மான் திமுக
2014 பி.செங்குட்டுவன் அதிமுக
2019 கதிர் ஆனந்த் திமுக

The post இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் மக்களவை தொகுதி: – ஒரு பார்வை appeared first on Dinakaran.

Tags : Vellore Lok Sabha Constituency ,Vellore Sepoy Revolution ,Vellore ,India ,war of ,British ,
× RELATED ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்