×

ரூ.10 கோடி தங்க நகைகள் பறிமுதல்

விருதுநகரில் கொரியர் சர்வீஸ் வேன்களில் கொண்டு சென்ற சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 16.700 கிலோ தங்க நகைகள், 3 வேன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் அருகே சத்திரெட்டியாபட்டி விலக்கில் தனிப்படை அதிகாரி பொன்.கணேசன் தலைமையில் எஸ்எஸ்ஐ மாரியப்பன், காவலர்கள் சதீஸ்பாபு, சரோஜா ஆகியோர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரையில் இருந்து வந்த தனியார் கொரியர் ஏஜென்சீஸ் நிறுவனத்தின் இரண்டு வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ராஜமாணிக்கம்(25) ஓட்டி வந்த வேனில் 8 அட்டை பெட்டிகளில் 6.800 கிலோ தங்க நகைகள் இருந்தன.  மதுரை மேலமாசி வீதியை சேர்ந்த சண்முகராஜ்(24) ஓட்டி வந்த வேனில் 9 அட்டை பெட்டிகளில் 5.200 கிலோ தங்க நகைகள் இருந்தன. விசாரித்ததில், இவற்றை நாகர்கோவில், சிவகாசி, ராஜபாளையத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் இரண்டு வேன்களையும் நகைகளுடன் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அரைமணி நேரம் கழித்து வந்த மற்றொரு கொரியர் சர்வீஸ் நிறுவன வேனை தனிப்படை அதிகாரி சுப்பிரமணிய பாண்டியன் தலைமையில் எஸ்எஸ்ஐ கருப்பசாமி மற்றும் காவலர்கள் நிறுத்தி சோதனை செய்தனர். வேனை மதுரை வலையங்குளத்தை சேர்ந்த சதீஸ்குமார்(30) ஓட்டி வந்தார். அதில் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதி நகைக்கடைகளுக்கு டெலிவரி செய்வதற்காக 9 அட்டை பெட்டிகளில் 4.700 கிலோ தங்க நகைகள் இருந்தன.

உரிய ஆவணங்கள் இல்லாததால் வேனுடன் நகையை பறிமுதல் செய்தனர். நகைகளுடன் பறிமுதல் செய்த 3 வேன்களையும், விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். இவற்றில் மொத்தம் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 16.700 கிலோ தங்க நகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இதே சோதனை சாவடியில் கூரியர் நிறுவனத்தின் வேனில் கொண்டு செல்லப்பட்ட 5.300 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.10 கோடி தங்க நகைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Private ,Officer ,Pon ,Chatraetiapati Wilkh ,SSI ,Mariyappan ,Ganesan ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...