×

தேர்தலில் போட்டியிட மறுப்பதற்கு காரணம் பணமா? பயமா? ரூ.12,000 கோடி தேர்தல் பத்திரங்கள்; பாரதிய ஜனதா தேர்தல் நிதி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதன் பின்னணி என்ன?

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசின் 2 ஆட்சிக்காலத்திலும் அமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். மாநிலங்களவை எம்பியாகத்தான் அவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார். 2008ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதாவின் தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த இவர், 2014ல் மோடி தலைமையிலான பாஜ ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு 2016 மே மாதம் மாநிலங்களவை உறுப்பினர்களாக பாஜவால் நியமிக்கப்பட்ட 12 பேரில் ஒருவர். 2017 செப்டம்பர் 3 முதல் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பின்னர் 2019 மே 31 முதல் நிதியமைச்சராகவும் தொடர்ந்து பொறுப்பு வகித்துள்ளார். இந்த முறை, மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக பதவி வகித்த பலரை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது பாஜ.

இதன்படி நிர்மலா சீதாராமன் தமிழகத்திலோ அல்லாது புதுச்சேரியிலோ போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஒவ்வொரு நாளும் பாஜவினர் காத்திருந்த நிலையில், திடீரென பெரிய குண்டை தூக்கிப்போட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்பதுதான் அது. இது குறித்து பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு கட்சி சார்பில் என்னிடம் கூறினர். தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட எனக்கு பரிந்துரைத்தனர்.

பாஜ தலைவர் ஜே.பி.நட்டா இதனை முன்மொழிந்திருந்தார். நானும் 10 நாட்களாக இது குறித்து யோசித்துப் பார்த்தேன். அதன்பிறகு, தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை கட்சிக்கு தெரிவித்து விட்டேன். காரணம், தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டு விட்டது. என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர், தொடர்ந்து நிதியமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். கட்சிக்கு நிதி வசூலிப்பதற்காகவே தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிவித்தது பாஜ அரசு. இதில் ரூ.12 ஆயிரம் கோடி வசூலானது. நாடே மலைக்கும் அளவுக்கு மலையளவு நிதியை பாஜ வசூலித்த பிறகும், அந்த கட்சியில் உள்ள ஒரு தலைவர், அதுவும் நிதியமைச்சர் இப்படி ஒரு ஓட்டைக் காரணத்தையா சொல்வது என பாஜவினர் சிலரே பொங்கி எழுகின்றனர். இருந்தாலும், நிர்மலா போட்டியிட மறுப்பதற்கு உண்மையான காரணம், அவர் தமிழகத்தில் போட்டியிட்டால் நோட்டாவை கூட தாண்ட மாட்டார் என்பதுதான் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரதமர் மோடியே இவருக்காக பிரசாரம் செய்தாலும், சொற்ப வாக்குகளை கூட வாங்க மாட்டார் என்பது பலரது கணிப்பாக இருந்தது. இவரது பேச்சுக்கள், செயல்பாடுகள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. இதனால், தோல்வி பயத்தில்தான் இவர் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என பலரும் விமர்சிக்கின்றனர். காரணம், நிர்மலா சீதாராமனின் பேச்சு பல சமயங்களிலும் சர்ச்சைக்குரியதாகவும், மக்கள் நலனுக்கு எதிரான, வெறுப்பின் வெளிப்பாடாகவும் மாறியிருக்கிறது. பெட்ரோல், டீசல் வரி தொடர்பாக நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அப்போதைய தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஒன்றிய அரசு எந்த அளவுக்கு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்பதை விளக்கியதோடு, மோசமாக ஆட்சி செய்பவர்கள் எங்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை என காட்டமாக தெரிவித்திருந்தார்.

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்ய பங்கீடு தர ஒன்றிய பாஜ அரசு சம்மதித்திருந்தது. ஆனால், மாநிலங்களுக்கு உரிமையாக வர வேண்டிய அந்த நிதிப் பங்களிப்பை தருவதிலும் பாஜ அரசு பாரபட்சம் காட்டியதை பல்வேறு மாநிலங்களும் கண்டித்திருந்தன. நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கள் மக்களின் நலனை பற்றியோ, மாநில நலன்களை பற்றியோ கவலைப்படாமல் ஆணவமாகவே இருக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் நாடாளுமன்றத்திலேயே அரங்கேறியிருக்கின்றன. வெங்காய விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது , வெங்காய விலை உயர்வால் மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள், என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறினார்.

இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், நான் வெங்காயம், பூண்டு சாப்பிட மாட்டேன். வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில்இருந்து நான் வரவில்லை’ என கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. இதுபோல், தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரண நிதியை பிச்சை என குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பேசியது, தமிழக மக்களை இழிவாகக் கருதும் அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இதுபோல், கேட்கும்போதெல்லாம் நிதி தருவதற்கு ஒன்றிய அரசு ஒன்றும் ஏடிஎம் மிஷின் அல்ல என அவர் கூறியது தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சிப்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டாக இருந்தாக பலரும் தெரிவித்திருந்தனர்.

இப்படி ஆதிக்க மனப்பான்மையோடு மமதையான கருத்துகளை தெரிவித்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இந்த சூழ்நிலையில்தான், தேர்தலில் போட்டியிடுவதற்கு பணம் இல்லாததுதான் காரணம் என அவர் கூறியிருக்கிறார். ஆனால், பல ஆயிரம் கோடியை தேர்தல் பத்திர நிதியாக ஸ்பிஐ வங்கி மூலம் பாஜ வசூலித்திருக்கும் நிலையில், வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளை நிர்வகிக்கும் துறையை கட்டுக்குள் வைத்துள்ள நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் இவரது இந்த பதில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு எம்பி தொகுதி வேட்பாளர் தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.90 லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதித்திருக்கிறது. அப்படியானால், பாஜவுக்கு தேர்தல் செலவாக ரூ.400 கோடிக்குள்தான் தேவைப்படும். அப்படியிருக்க பல ஆயிரம் கோடியை தேர்தல் நிதியாக வசூலித்ததன் நோக்கம் என்ன என்ற பிரதான கேள்வி எழுந்துள்ளது. இதவிர, என்னிடம் பணம் கிடையாது என்று நிர்மலா சீதாராமன் கூறியது, மேற்கண்ட நிதி வேறு யாருக்கு செல்கிறது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு கட்சியே நிதி அளிக்கும்போது, அந்த நிதி தனக்கு இல்லை என்பதைத்தான் நிதியமைச்சர் இவ்வாறு குறிப்பிடுகிறாரா? பணம் யாருக்கோ எங்கேயோ போகிறதா? பாஜ தலைமை மீது இவருக்கு என்ன கோபமோ அதிருப்தியோ தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

* அப்பவும் இல்ல… இப்பவும் இல்ல…
கடந்த ஆண்டு இறுதியில் மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகளும் பாதிப்படைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணமும் அளித்தது. பின்னர், இந்த இரண்டு பேரழிவுகளையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். இதனை எதிர்கொள்ள தற்காலியமாக ரூ.7,033 கோடியும், நிந்தரமாக ரூ.12,659 கோடியும், உடனடியாக ரூ.2,000 கோடியும் விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஆனால், சில நாட்களில் வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்த நிர்மலா சீதாராமன், இவற்றை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என கூறி விட்டார். சொந்த மாநிலம் என்றபோதும் நிதி தர மறுத்தவரை தமிழக மக்கள் எப்படி ஏற்பார்கள்? போட்டியிட மறுத்ததன் பின்னணி இதுவாகவும் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

* தமிழரென சொல்கிறார் தமிழகத்துக்கு மறுக்கிறார்
பல தலைவர்களும் நிதியமைச்சராகவும், பல துறை அமைச்சர்களாகவும் பொறுப்பு வகித்திருக்கின்றனர். அவர்கள் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை சொந்த மாநிலங்களில் செயல்படுத்தியும், கூடுதலாக நிதி ஒதுக்கியும் மாநில மக்களின் தேவையை பூர்த்தி செய்யத் தவறியதே இல்லை. உதாரணமாக டி.ஆர்.பாலு ஒன்றிய அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டுக்கு பல்வேறு தேசிய நெடுஞ்சாலை, பிரமாண்ட பாலங்கள் திட்டங்களை கொண்டு வந்தார். இதுபோல், தயாநிதி மாறன் ஒன்றிய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் தொலைபேசியில் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாயில் பேசும் திட்டத்தை கொண்டு வந்தார்.

நிர்மலா சீதாராமன் பல சந்தர்ப்பங்களிலும் தன்னை தமிழகத்தை சேர்ந்தவர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை நிரூபிப்பது போல நாடாளுமன்ற விவாதங்களின்போதும், பட்ஜெட்உரையின் போதும் சங்க இலக்கியங்களில் இருந்து மேற்கோள் காட்டி பேசுவது அவரது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது தமிழகத்துக்கு ஏதாவது அவர் செய்திருக்க வேண்டும். ஆனால் இவர் தமிழகத்துக்கு என ஒரு துரும்பை கூட தந்தது கிடையாது. நிதி கேட்கும்போது கூட பாரபட்சம் காட்டி மறுத்திருக்கிறார். இப்படி தமிழர் என அடையாளப்படுத்திக் கொண்டு தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் பாரபட்சம் காட்டிய இவருக்கு தமிழகத்தில் போட்டியிட எப்படி துணிவு வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

* பாஜவை கழுவி ஊற்றும் நிர்மலாவின் கணவர்
நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர். பொருளாதார நிபுணர். தனது மனைவி ஒன்றிய பாஜ அரசில் நிதியமைச்சராக இருந்தபோதும், அரசின் கொள்கைகளையும், முடிவுகளையும் பிரபாகர் அடிக்கடி விமர்சித்து வருகிறார். அண்மையில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய ஊழல் என்று கூறியிருந்தார். பாஜவை இந்திய மக்கள் மக்களவை தேர்தலில் தண்டிப்பார்கள் என்று பிரபாகர் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தலில் போட்டியிட மறுப்பதற்கு காரணம் பணமா? பயமா? ரூ.12,000 கோடி தேர்தல் பத்திரங்கள்; பாரதிய ஜனதா தேர்தல் நிதி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதன் பின்னணி என்ன? appeared first on Dinakaran.

Tags : Janata Party ,Finance Minister ,Nirmala Sitharaman ,Modi ,Union BJP government ,Rajya Sabha ,Bharatiya Janata Party ,Modi-led ,BJP government ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...