×

காஞ்சிபுரம் கோயில்களை சுற்றிப்பார்க்க பேட்டரி கார்கள் இயக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை பக்தர்கள் சிரமமின்றி சென்று தரிசனம் செய்யும் வகையில், பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கியுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற கோயில் நகரமாகவும், கலாச்சார நகராகவும், பாரம்பரிய நகராகவும் விளங்கி வருகிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களான காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதர் கோயில், வைகுண்டபெருமாள் கோயில் உள்ளிட்ட பிரசித்திபெற்ற கோயில்களை சுற்றிப்பார்க்க ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

அடிக்கொரு லிங்கம் அமையப்பெற்ற காஞ்சியில் நூற்றுக்கணக்கான கோயில்களை சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது. இங்குள்ள அனைத்து கோயில்களை இணைக்கும் வண்ணம் நகர பேருந்து சேவையோ, மினி பேருந்து வசதியோ இல்லை. எனவே, வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து ஷேர் ஆட்டோ, குதிரை வண்டி போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்தி கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால், பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில், ஒரே சமயத்தில் எல்லா பிரசித்திபெற்ற கோயில்களையும் சுற்றிப்பார்க்க எண்ணும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பிரசித்திபெற்ற கோயில்களையும் சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் தரிசிக்க ஏதுவாக, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ளதுபோல பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் அனைத்து கோயில்களுக்கும் சிரமமில்லாமல் சென்று வழிபட்டு மனநிறைவோடு திரும்பிச் செல்வர். மேலும் பேட்டரி வாகனம் இயக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கும். எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களை சுற்றிப்பார்க்க வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் கோயில்களை சுற்றிப்பார்க்க பேட்டரி கார்கள் இயக்க வேண்டும்: கலெக்டரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Consumer Protection and Awareness Association ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...