×

புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் தங்களை சேர்க்க கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேவையற்றது என்றும் தீர்ப்பளித்துள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ரகுபதி ஆணையத்தை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முந்தைய அதிமுக அரசு, இந்த வழக்கில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டது. அதன்படி அதிமுக அரசு மேல் முறையீடு செய்தது.

இந்நிலையில் அரசின் உத்தரவை எதிர்த்து அப்போதைய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அதிமுக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல் முறையீட்டு வழக்கை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை இந்த வழக்கில் இணைக்கக் கோரியும் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் அதிமுக சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கை வாபஸ் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டதால் மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதவில்லை. இந்த வழக்கில் மாநில அரசு முடிவெடுத்து புகாரில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என்று தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அந்த இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாபசுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, மேல் முறையீடு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் வழக்கில் தங்களை இணைக்க கோரி ஜெயவர்த்தன் மற்றும் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தேவையற்றவையாகும் என்று தீர்ப்பளித்தனர்.

The post புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...